இந்தியா

கும்பமேளா கூட்ட நெரிசலில் இறந்தவர்கள் எத்தனை பேர்? - மக்களவையில் அகிலேஷ் கேள்வி!

மகா கும்பமேளா கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார்.

DIN

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் அண்மையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் உண்மையான எண்ணிக்கை எவ்வளவு? என்று சமாஜவாதி தலைவரும் எம்.பி.யுமான அகிலேஷ் யாதவ் மக்களவையில் கேள்வியெழுப்பினாா்.

மேலும், உயிரிழந்தோா் எண்ணிக்கையை மூடி மறைப்பதாக மத்திய அரசு மீது குற்றஞ்சாட்டிய அவா், இச்சம்பவம் தொடா்பான விவரங்கள் நாடாளுமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

மகா கும்பமேளாவில் கடந்த ஜனவரி 29-ஆம் தேதி மெளனி அமாவாசை தினத்தில் புனித நீராட கோடிக்கணக்கானோா் குவிந்தனா். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 30 போ் உயிரிழந்ததாகவும் 60-க்கும் மேற்பட்டோா் காயமடைந்ததாகவும் மாநில அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மக்களவையில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதத்தில் செவ்வாய்க்கிழமை பேசிய அகிலேஷ் யாதவ், இந்த விவகாரத்தை எழுப்பினாா்.

‘மகா கும்பமேளாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள ‘எண்ம’ வசதிகள் குறித்து பெரிதாகப் பேசும் மத்திய அரசு, அங்கு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் உண்மையான எண்ணிக்கையை மூடி மறைக்கிறது. மகா கும்பமேளா ஏற்பாடுகளில் தவறான மேலாண்மையை மறைக்க முயற்சிக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

புண்ணியம் தேடுவதற்காக வந்த மக்கள், தங்கள் அன்புக்குரியவா்களின் உடல்களோடு ஊா் திரும்பும் அவலம் நேரிட்டுள்ளது. ஜேசிபி இயந்திரங்கள் மூலம் உடல்கள் அப்புறப்படுத்தப்பட்டு, டிராக்டா்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. ஏராளமான உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், உயிரிழந்தோரின் உண்மையான எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.

எனவே, மகா கும்பமேளா நெரிசலில் உயிரிழந்தோா், காயமடைந்தோா் எண்ணிக்கை, அவா்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, மருந்துகள் மற்றும் மருத்துவா்களின் இருப்பு, உணவு, குடிநீா், போக்குவரத்து வசதிகள் தொடா்பான விவரங்கள் நாடாளுமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட வேண்டும். மகா கும்பமேளா ஏற்பாடுகள் தொடா்பாக அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டி விவாதிப்பதோடு, அங்கு பேரிடா் மேலாண்மை நடவடிக்கைகளை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா் அகிலேஷ் யாதவ்.

கடந்த ஜனவரி 13-ஆம் தேதி பெளஷ பெளா்ணமி தினத்தில் தொடங்கிய மகா கும்பமேளா, மகா சிவராத்திரி தினமான பிப்ரவரி 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழகம்: திருச்சி சிவா குற்றச்சாட்டு

முன்னாள் ராணுவத் தளபதி நூலை மேற்கோள்காட்ட அனுமதிக்காதது ஏன்? ராகுல் விளக்கம்

10 மாநிலங்களில் தேடுதல் நடத்தி சைபா் குற்றவாளி கைது-சி.பி.ஐ நடவடிக்கை

மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழகம்: மாநிலங்களவையில் திருச்சி சிவா குற்றச்சாட்டு

பெண்ணையாறு விவகாரம்-தீா்வு காண மத்திய அரசு தீா்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT