கும்பமேளா 5-ஸ்டார் நிகழ்ச்சியல்ல! ஆன்மிக சாதுக்கள் அதிருப்தி
இது கும்ப’மேளா’; 5-ஸ்டார் ஹோட்டல் அல்ல...
கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் உள்ள ‘திரிவேணி சங்கமத்தில்' 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவில் புனித நீராடல் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பக்தர்களால் கருதப்படுகிறது. பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
பிப். 26 வரை நடைபெறும் மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடலில் பங்கேற்கும் பக்தர்கள் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, லட்சக்கணக்கான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடலுக்காகத் திரண்டுள்ளனர். இதுவரை புனித நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 39 கோடியைக் கடந்துவிட்டது.
இந்த நிலையில், ‘மகா கும்பமேளா’ புனித நிகழ்ச்சியென்பதை புறந்தள்ளிவிட்டு அதனையொரு 5-ஸ்டார் கலாசார நிகழ்ச்சியாக பாவித்துவருவது வேதனையளிப்பதாக சநாதன முறையை தீவிரமாக பின்பற்றி வாழும் சாதுக்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
“இது கும்ப’மேளா’; 5-ஸ்டார் ஹோட்டல் அல்ல என்பதை நினைவில்கொள்ள வேண்டும். விஐபி சேவை, வசதி வேண்டுமென நினைப்பவர்களுக்கான இடம் இதுவல்ல” என்று அதிருப்தியை வெலிப்படுத்தியுள்ளார் அனைத்து இந்திய உதாசின சமுதய சங்கத் அமைப்பின் தலைவர் மஹாந்த் தர்மேந்திர தாஸ்.
மௌனி அமாவாசை நாளான ஜன. 29 ஆம் தேதி திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராட குவிந்தனர். இதன் விளைவாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 30 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஐஐடி பாபா அபய் சிங், மோனலிசாவை போன்ற சாயலுடன் திகழும் பூ விற்பனை செய்யும் இளம்பெண், நடிகையாக இருந்து ஆன்மிகவாதியாகியுள்ள ஹர்ஷா ரிசாரியா, மமதா குல்கர்னி ஆகியோரை மையப்புள்ளியாக வைத்து கும்பமேளாவை வணிக நிகழ்ச்சி போன்று ஊடகங்கள் விளம்பரப்படுத்துவற்கு அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள மஹாந்த் தர்மேந்திர தாஸ் கூறியிருப்பதாவது, “மகா கும்பமேளா கவர்ச்சிகரமான 5-ஸ்டார் கலாசார பாணியிலான நிகழ்ச்சியல்ல. இது, சாதுக்கள், பக்தர்கள், சநாதன நம்பிக்கை கொண்டவர்களுக்கானது.
விஐபி அந்தஸ்து வசதிகளை அனுபவிக்கவோ விளம்பரத்துக்காகவோ சாதுக்கள் பலரும், அதேபோல பக்தர்களில் ஒருபகுதியினரும் இங்கு வருகை தரவில்லை. அவர்கள் வெறும் மண் தரையில் படுத்து, உறங்கி, அதிகாலையில் புனித கங்கையில் நீராடவே வருகின்றனர்.
அப்படிருக்கையில், நீங்கள் பெரியளவிலன கூடாரங்கள் கட்டியெழுப்ப தேவையில்லை.
கும்பமேளாவில் சாதுக்கள் பலர் உள்ளனர் அவர்களையெல்லாம் விடுத்து, ஊடகங்கள் இதுபோன்ற மக்களை முன்னிறுத்தி வருவதை பார்க்கும்போது ஊடகங்கள் மீதே தவறு உள்ளது. ஏன் இப்படி செய்கிறார்கள்?
இன்னொருபுறம், அதிகாரிகள் சாமானிய பக்தர்களின் தேவைகளைக் கண்டுகொள்வதில்லை. அவர்களின் கவனம் முழுவதும் விஐபிக்கள் மீதே உள்ளது. அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் யோகி ஆதித்யநாத்தின் முயற்சிகளும் வீணடிக்கப்பட்டுவிட்டன” என்று அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.