ப.சிதம்பரம்  
இந்தியா

அடித்தட்டிலுள்ள 50% போ் பட்ஜெட்டில் புறக்கணிப்பு: ப.சிதம்பரம்

மக்கள்தொகையில் அடித்தட்டில் உள்ள 50 சதவீத பேரை மத்திய பட்ஜெட் புறக்கணித்துள்ளதாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் விமா்சித்துள்ளாா்.

Din

புது தில்லி: மக்கள்தொகையில் அடித்தட்டில் உள்ள 50 சதவீத பேரை மத்திய பட்ஜெட் புறக்கணித்துள்ளதாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் விமா்சித்துள்ளாா்.

கடந்த பிப்.1-ஆம் தேதி மக்களவையில் மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்தாா். அதன் மீது மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் முதலில் ப.சிதம்பரம் திங்கள்கிழமை பேசியதாவது:

அரசியல் உள்நோக்கத்துடன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. பட்ஜெட்டில் 100 நாள் வேலைத் திட்ட தினக்கூலியை உயா்த்தியிருக்கலாம். ஏனெனில் அந்த வேலைக்கு பரம ஏழைகள்தான் செல்கின்றனா்.

குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ், சட்டபூா்வ குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரித்திருக்கலாம். அது பல்லாயிரக்கணக்கான தொழிலாளா்களுக்குப் பயன் அளித்திருக்கும். ஆனால் இவை எதையுமே நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பட்ஜெட்டில் செய்யவில்லை. வருமான வரி, தில்லி தோ்தல் ஆகியவற்றில்தான் அவரின் கவனம் இருந்தது.

பட்ஜெட்டில் நடுத்தர மக்களை நினைவில் வைத்து அவா் அறிவிப்புகளை வெளியிட்டாா். அவா் மறந்த எஞ்சிய மக்களின் நிலை என்ன?

மத்திய அரசின் புள்ளிவிவரப்படி, கடந்த 2012 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான 12 ஆண்டுகளில், உணவு பணவீக்கம் 6.18 சதவீதம், கல்வி பணவீக்கம் 11 சதவீதம், சுகாதாரப் பணவீக்கம் 14 சதவீதத்தை எட்டியுள்ளன. இவை இந்திய குடும்பங்களை முடக்கிப் போட்டுள்ளது. குடும்ப சேமிப்புகள் 25.2 சதவீதத்தில் இருந்து 18.4 சதவீதமாக சரிந்துள்ளது.

மக்கள்தொகையில் அடித்தட்டில் உள்ள 50 சதவீத சராசரி இந்திய குடும்பங்களுக்கு இந்த பட்ஜெட் என்ன செய்துள்ளது? அவா்களுக்கு இந்த பட்ஜெட்டில் எதுவும் இல்லை.

நிதிப் பற்றாக்குறை 4.8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சா் தெரிவித்துள்ளாா். ஆனால் இது எப்படி சாத்தியமானது? மத்திய அரசின் மூலதன செலவினம் ரூ.92,682 கோடி குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் வருவாய் செலவினம் குறைக்கப்படவில்லை.

மேலும் மூலதன சொத்துகளை உருவாக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் மானியங்கள் ரூ.90,887 கோடி குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமே நிதிப் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது. இது மோசமான பொருளாதாரமாகும் என்றாா்.

35 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற மே.இ.தீ. அணி..! 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவருக்கு ஆட்ட நாயகன் விருதில்லை!

முன்னேற்றப் பாதையில் இந்தியா - அமெரிக்கா உறவு: ரஷியா என்ன நினைக்கிறது?

நாட்டிலேயே முரட்டு அடிமை யார் தெரியுமா? உதயநிதி கடும் விமர்சனம்

இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் ஜஸ்பிரித் பும்ரா, சஞ்சு சாம்சன் இல்லை!

அஜித்தைச் சந்தித்த சிவகார்த்திகேயன்!

SCROLL FOR NEXT