முகப்பு
இந்தியா

தில்லி தேர்தல் எதிரொலி: பஞ்சாபிலும் ஆம் ஆத்மி ஆட்சி விரைவில் கவிழும்! -காங். எம்.பி.

பஞ்சாபிலும் ஆம் ஆத்மி ஆட்சி விரைவில் கவிழும்! - காங்கிரஸ் எம்.பி.

Updated On : 10 பிப்ரவரி, 2025 at 11:24 AM
பகிர்:

பஞ்சாபிலும் ஆம் ஆத்மி ஆட்சி விரைவில் கவிழும் என்று காங்கிரஸ் எம்.பி. சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா தெரிவித்துள்ளார்.

தில்லி யூனியன் பிரதேச பேரவையின் 70 இடங்களுக்கு கடந்த புதன்கிழமை (பிப். 5) நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக 48 இடங்களில் வென்று, ஆம் ஆத்மியை ஆட்சியிலிருந்து அகற்றியது.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி.யும் பஞ்சாப் மாநில முன்னாள் துணை முதல்வருமான சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, “தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியடைந்ததன் எதிரொலியாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பலர் அக்கட்சியிலிருந்து விலகுவர்” என்று கூறியுள்ளார்.

திங்கள்கிழமை(பிப். 10) செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது, “தில்லி தேர்தல் பரப்புரையில் ‘நான் ஊழல்வாதியெனில் எனக்கு வாக்களிக்காதீர்’ என்று அரவிந்த் கேஜரிவால் சொல்லியிருந்தார். இப்போது, தில்லிவாசிகளால் கேஜரிவால் மோசமாக தோற்கடிக்கப்பட்டுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சிக் கூட்டம் இன்று தில்லியில் நடைபெறுகிறது. ஆனால், அதற்கு பதிலாக கேஜரிவால் பஞ்சாபுக்கு சென்றிருக்க வேண்டும்.

அவர்களது கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பலர் பல்வேறு கட்சிகளுடன் தொடர்பிலிருக்கின்றனர். அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்களை நம் கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டாமென கட்சித் தலைமையை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

பாரதீய ஜனதா கட்சியுடன் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தொடர்பிலிருப்பதாக தகவல் வெளியாகி வருவது குறித்து பேசிய ரந்தாவா, “அப்படி அந்த எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுடன் தொடர்பிலிருப்பின், பஞ்சாபுக்கு எதிர்காலத்தில் தீங்கு விழையக்கூடுமென நான் நினைக்கிறேன்” என்றார்.

“ஐந்தாண்டுகள் முழுமையாக ஆட்சி நிறைவடையும் முன்பே பஞ்சாபில் தேர்தல் வரும். ஆம் ஆத்மியிலிருந்து ஓரிரு தலைவர்கள் பாஜகவில் ஐக்கியமானால் அங்கு இடைத்தேர்தல் வரும்.

முதல்வர் பகவந்த் மானின் கட்டுப்பாட்டில் அவர்கள் இல்லை... இதன் காரணமாக, விரைவில் தேர்தல் வரக்கூடும். ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் வெளியேறினால், அவர்கள் காங்கிரஸில் வந்து இணைவார்கள். ஏனெனில் பாஜகவுக்கு பஞ்சாபில் எதிர்காலமில்லை” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.