நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த 15ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
பொதுவாகவே பொதுத் தேர்வுகள் என்றாலே பதற்றமாகத்தான் இருக்கும் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும். இந்த நிலையில் பொதுத் தேர்வு தொடங்கி ஒரே நாளில், வினாத்தாள் கசிந்ததாக விடியோக்களும் தகவல்களும் சமூக வலைத்தளத்தில் பரவத் தொடங்கியது.
அதாவது எப்படி படிக்கலாம், டிப்ஸ் என்று இதுவரை தேவையற்ற தகவல்களுடன் விடியோ போட்டு வியாபாரம் செய்துவந்த பல சமூக வலைத்தளங்கள், பொதுத் தேர்வு தொடங்கிவிட்டதால், மாணவர்களையும் பெற்றோரையும் முட்டாளாக்கும் விதத்தில் வினாத்தாள் வேண்டுமா என்றெல்லாம் தலைப்பிட்டு சமூக ஊடகங்களில் போலியான தகவல்களைப் பகிர்ந்துள்ளன.
இதுபோன்ற தவறான தகவல்களைப் பகிர்ந்திருக்கும் சமூக ஊடகப் பக்கங்களுக்கு சிபிஎஸ்இ நிர்வாகம் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இதுபோன்ற தவறான தகவல்களைப் பகிர்ந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல், இதுபோன்ற தகவல்களை சிபிஎஸ்இ பொதுத் தேர்வெழுதும் மாணவர்களே தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தால், அவர்கள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தேர்வெழுத முடியாத வகையில் தடை செய்யப்படுவது போன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.
அதுபோல பெற்றோரும் மாணவர்களும் இதுபோன்ற போலியான தகவல்களை நம்பி பதற்றம் அடைய வேண்டாம் என்றும், அவை உண்மை என நம்பி மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என்றும் சிபிஎஸ்இ நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
என தேர்வே, தேர்வு முடியும் வரை சமூக ஊடகங்களின் பக்கம் செல்லாமல் இருப்பதும், தேர்வு தொடர்பான எந்த தகவல்களையும் சமூக ஊடகங்களில் பகிர்வது குற்றம் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்திருப்பதை அறிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுவது நல்லது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.