பொதுவாக விபத்துகளின்போதுதான் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாவார்கள். ஆனால், தற்போது சாலை விபத்துகளைப் போலவே கூட்ட நெரிசலும் அதிகரித்து, அதனால் உயிரிழப்புகளும் நேரிடுகின்றன.
அண்மையில், புஷ்பா வெளியான திரையரங்கு, பிரயாக்ராஜ் கும்பமேளாவில், திருப்பதி வைகுந்த சேவையின்போது, மெரினா கடற்கரை போக்குவரத்து நெரிசல் உள்பட அண்மையில் தில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் வரை பலரையும் கதிகலங்க வைக்கும் சம்பவங்களின்போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றி..
பயணத்தை திட்டமிடும்போதே..
ஓரிடத்தில் மிக முக்கிய நிகழ்வு நடக்கிறது என்றால் அங்கு சுமாராக எத்தனை பேர் வருவார்கள், செல்வதற்கும் திரும்புவதற்கும் இருக்கும் வழிகள், நாம் கண்டிப்பாக செல்லத்தான் வேண்டுமா? எத்தனை பேர் செல்கிறோம், குழந்தைகள் இருக்கிறார்களா? முதியவர்கள் இருக்கிறார்களா? என்பதனை முதலில் ஆலோசிக்க வேண்டும்.
கண்டிப்பாக செல்கிறோம்..
எல்லாவற்றையும் ஆலோசித்துவிட்டு, செல்வது முடிவான பிறகு, சென்று திரும்ப போக்குவரத்தை உறுதி செய்துகொள்ளுங்கள்.
ஓரிடத்துக்குச் செல்லும்போது ஒரு போக்குவரத்து வழி மட்டும் இல்லாமல் வேறு பல போக்குவரத்து வழிகளையும் கண்டறிந்துகொள்ளுங்கள்.
சென்றுவிட்ட பிறகு, திடீரென கூட்டம் சேர நேரிட்டால்..
ஓரிடத்தில் திடீரென கூட்டம் அதிகரிக்கிறது என்றால், முனைப் பகுதி அல்லது மத்தியில் இருக்காமல், நுனிப் பகுதிக்கு வந்துவிட வேண்டும்.
ரயில் ஏறும் இடத்தில் கூட்டம் என்றால், ரயிலில் ஏறுவதை விடவும் நெரிசலில் சிக்கி பலியாகக் கூடாது என்பதில்தான் கவனம் இருக்க வேண்டும். எனவே, கூட்டத்திலிருந்து வெளியேறி பின்பகுதிக்கு வருவது நல்லது.
நாம் இருக்கும் கூட்ட நெரிசல் கொண்ட பகுதிக்கு அருகே சாலை, கதவு, படிகட்டு, வழி ஏதேனும் இருக்கிறதா என்பதை அறிந்துகொண்டு அங்குச் சென்று நின்றுகொள்ளலாம்.
எங்கேனும் நின்றால், அதிக நெரிசலில் சிக்க வேண்டியது இருக்காது என்று உறுதியாக தெரிந்தால், அங்குச் சென்று நின்றுகொள்ளலாம். உதாரணமாக ஏதேனும் தடுப்புகள், சிறு வளைவுகள் போன்றவை.
எங்கு நகர்வதாக இருந்தாலும், அது தப்பிப்பதற்கான வழியாக இருக்க வேண்டும். வகையாக சிக்கிக்கொள்வதாக இருக்கக் கூடாது. முன்னேறும் முன் அதைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
கூட்டத்தில் சிக்கிக்கொண்டால்..
நிமிர்ந்து நடந்துசெல்லுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் தரையில் விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள். விழுந்தால் எழுந்திரிக்கவே முடியாது.
ஒருவேளை விழுந்துவிட்டால் உருண்டு யாரும் வராத இடத்தில் எழும்ப முடியுமா என முயற்சிக்கலாம். அதற்குள் நான்கு பேர் மிதித்திருக்கும் அபாயம் இருக்கிறது.
ஒருவேளை கூட்டம் ஓரிடத்தை நோக்கி வேகமாக ஓடுகிறது என்றால், அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு உறுதியான பொருளைப் பற்றிக்கொண்டு நிற்கப் பாருங்கள். தூண், இரும்பு மேஜை போன்றவற்றை.
கடுமையான நெரிசலுக்குள் சிக்கிக்கொள்ளும்போது, ஒரு குத்துச்சண்டை வீரராகவே மாறிவிட வேண்டும். ஆனால் யாரையும் குத்திவிட வேண்டாம். அதாவது நமது கைவிரல்களை மடக்கி நெஞ்சுப் பகுதியில் இரு கைகளையும் வைத்து, நமது உள்ளுறுப்புகள் நெருக்கதலில் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
உங்கள் உறவினர்களுக்கு எதையாவது சொல்ல வேண்டும் என்றால் கத்துவதால் எதுவும் நடக்காது. சைகை பாஷை, கண்ணால் எங்குச் செல்ல வேண்டும், வெளியேற வேண்டும் என்பதை எல்லாம் கையை அசைத்துத்தான் சொல்ல வேண்டும்.
உங்கள் அருகில் ஏதேனும் தடுப்புகள் இருந்தால் அதைப் பிடித்துத் தப்பித்துக் கொள்வதுதான் ஒரே வழி. இல்லையென்றால், கூட்டத்தோடு கூட்டமாக ஓடுவதுதான் கீழே விழாமல் இருக்க உதவும். ஓடாமல் நிற்கும்போதுதான் கீழே விழ நேரிடும்.
கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருக்கும்போதே ஓரளவுக்கு நிலைமையை புரிந்துகொண்டு, கூட்டத்தின் மையப்பகுதியில் இருந்து ஓரத்துக்கு வந்துவிட வேண்டும்.
கூட்ட நெரிசலின்போது, அருகில் உங்களை தள்ளுபவர்கள் மீது கோபத்துடன் கத்துவதோ, அவர்களை மீண்டும் தள்ளுவதோ தவறு. இதனால் உங்கள் உடல் சக்தியை இழக்கும். அதற்கு மாறாக அந்த கூட்டத்திலிருந்து மெல்ல லாவகமாக வெளியேறுவதில்தான் உங்கள் சக்தியைக் காட்ட வேண்டும் என்கிறார்கள் கூட்ட நெரிசல் பகுதி மேலாண்மைப் பணியில் ஈடுபட்ட நிபுணர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.