தில்லி பெண்களுக்கு மார்ச் 8-க்குள் ரூ.2,500: ரேகா குப்தா
மார்ச் 8-க்குள் மாதாந்திர உதவித் தொகை வரவு வைக்கப்படும்..
தில்லியில் பெண்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ. 2,500 மார்ச் 8-ம் தேதிக்குள் முதல் தவணை வழங்கப்படும் என்று தில்லி முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள ரேகா குப்தா தெரிவித்தார்.
தில்லியின் ஒன்பதாவது முதல்வராக பாஜகவின் முதல்முறை சட்டப்பேரவை உறுப்பினர் ரேகா குப்தா பதவியேற்கவுள்ளார். சுஷ்மா ஸ்ராஜ், ஷீலா தீட்சித்,, அதிஷி ஆகியோக்குப் பிறகு நான்காவது பெண் முதல்வர் என்கிற பெருமையையும் ரோகா குப்தா பெறுகிறார்.
இதனிடையே ரேகா குப்தா தனது இல்லத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறியதாவது,
பாஜக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மாதாந்திர உதவித் தொகையின் முதல் தவணை மார்ச் 8-ஆம் தேதிக்குள் தகுதியான பெண்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
முந்தைய ஆம் ஆத்மி அரசைக் கடுமையாக விமர்சித்த குப்தா, ஒவ்வொரு பைசாவிற்கும் அவர்கள் மக்களுக்குக் கணக்கு கொடுக்க வேண்டும் என்றார்.
ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக, காஷ்மீர் கேட்டில் உள்ள ஸ்ரீ மார்கட் வாலே அனுமன் பாபா கோயிலுக்குச் சென்றார் குப்தா.
புதன்கிழமை பாஜக சட்டப்பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குப்தா, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தனது முதன்மையான முன்னுரிமை. பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நிறைவேற்றுவது தலைநகரில் உள்ள 48 பாஜக எம்எல்ஏக்களின் பொறுப்பாகும்.
பெண்களுக்கான நிதியுதவி உள்பட எங்கள் அனைத்து வாக்குறுதிகளையும் நாங்கள் நிச்சயமாக நிறைவேற்றுவோம். மார்ச் 8-ஆம் தேதிக்குள் பெண்கள் தங்கள் கணக்குகளில் 100 சதவீதம் பண உதவியைப் பெறுவார்கள் என்று அவர் கூறினார்.
மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.