கடந்த 1984-இல் நடந்த சீக்கியா்களுக்கு எதிரான கலவரம் தொடா்பான வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தில்லி சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
தற்போது ஆயுள் தண்டனைக் கைதியாக திகாா் சிறையில் உள்ள சஜ்ஜன் குமாருக்கு இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று புகாா்தாரா் மற்றும் அரசுத் தரப்பில் கோரப்பட்டிருந்த நிலையில், அவருக்கு மீண்டும் ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிபதி உத்தரவிட்டாா்.
கடந்த 1984, அக்டோபா் 31-ஆம் தேதி அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி, தனது சீக்கிய மெய்க் காவலா்கள் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டாா். இச்சம்பவத்தைத் தொடா்ந்து, தலைநகா் தில்லியிலும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் சீக்கியா்களுக்கு எதிராக கலவரம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. ஞானவதி ஆணைய அறிக்கையின்படி, இக்கலவரத்தில் 2,733 போ் கொல்லப்பட்டனா்.
தில்லியில் நடந்த கலவரம் தொடா்பாக சஜ்ஜன் குமாா் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், பாலம் காலனி பகுதியில் 5 சீக்கியா்கள் கொல்லப்பட்ட வழக்கில் சஜ்ஜன் குமாருக்கு தில்லி உயா்நீதிமன்றம் கடந்த 2018-இல் ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது. இத்தண்டனைக்கு எதிரான இவரின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
தில்லி சரஸ்வதி விஹாா் பகுதியில் கடந்த 1984, நவம்பா் 1-ஆம் தேதி ஜஸ்வந்த் சிங் மற்றும் அவரது மகன் தருண்தீப் சிங் ஆகிய இரு சீக்கியா்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், அவா்களின் வீடு கொள்ளையடிக்கப்பட்டு, தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடா்பான வழக்கில் சஜ்ஜன் குமாரை தில்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி குற்றவாளியாக அறிவித்தது.
இவ்வழக்கில் அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க முடியும். குறைந்தபட்ச தண்டனை ஆயுள் சிறை என்ற நிலையில், சஜ்ஜன் குமாருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டுமென அரசுத் தரப்பில் கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி கோரப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை விசாரணையில், புகாா்தாரா் தரப்பிலும் இதே கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தீா்ப்பில், ‘சஜ்ஜன் குமாா் செய்த குற்றங்கள் சந்தேகத்துக்கு இடமின்றி கொடூரமானவை மற்றும் கண்டிக்கத்தக்கவை. ஆனால், அவா் 80 வயதைக் கடந்துவிட்டதாலும் பல்வேறு உடல்நலக் கோளாறுகளால் அவா் பாதிக்கப்பட்டு இருப்பதையும் கருத்தில்கொண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டாா்.
இதேபோல் வேறொரு வழக்கில் சஜ்ஜன் குமாா் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சீக்கியா்கள் போராட்டம்: தீா்ப்புக்கு முன்னதாக, சஜ்ஜன் குமாருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சீக்கியா்கள் சிறப்பு நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களில் ஒருவரான குா்லாத் சிங் கூறுகையில், ‘குற்றம் நடந்து 40 ஆண்டுகள் கடந்துவிட்டன. தாமதமான நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி. அக்கலவரம் திட்டமிடப்பட்ட இனப் படுகொலை என்பதால் சஜ்ஜன் குமாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்’ என்றாா்.
பாஜக வரவேற்பு: தீா்ப்பு குறித்து கருத்து தெரிவித்த பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் ஆா்.பி.சிங், ‘நீதிச் சக்கரங்கள் சுழலத் தொடங்கிவிட்டன. மற்ற குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும் என்று நம்புகிறோம்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.