ரஷியாவில் நடைபெறவிருக்கும் இரண்டாம் உலகப் போர் வெற்றி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டாம் உலகப் போரின் 80 ஆம் ஆண்டு வெற்றி விழா, ரஷியாவின் மாஸ்கோ நகரில் சிகப்பு சதுக்கத்தில் மே மாதம் கொண்டாடப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் ராணுவ வீரர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ரஷிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சியில் இந்திய ராணுவ வீரர்களின் அணிவகுப்பும் நடைபெறவிருப்பதால், பிரதமர் செல்வதற்கு ஒருமாத காலம் முன்னதாகவே ராணுவ வீரர்கள் சென்று, அணிவகுப்புக்கு ஒத்திகை மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷியாவில் 16 ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அழைப்பு விடுத்ததன்பேரில், பிரதமர் மோடி கடந்தாண்டு அக்டோபர் மாதம் ரஷியா சென்றிருந்தார். அதன்பிறகு, ரஷியாவுக்கு தற்போது செல்ல வாய்ப்புகள் இருப்பதாகக் கூறுகின்றனர்.
1941 ஆம் ஆண்டு, ஜூன் 22 ஆம் தேதி சோவியத் யூனியன் மீது (தற்போதைய ரஷியா) ஜெர்மனி தாக்குதல் நடத்தியது. 1945, மே மாதம் 8 ஆம் தேதிவரை நீடித்த இப்போரில், சோவியத் யூனியனிடம் ஜெர்மனி படைகள் சரணடைந்தன. இந்த போர் வெற்றியைத்தான், ரஷியா ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் 9-ல் கொண்டாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.