முகப்பு
இந்தியா

உ.பி. கலவர வழக்கு: 28 பேருக்கு ஆயுள் சிறை

உத்தர பிரதேச மாநிலம், காஸ்கஞ்சில் கடந்த 2018-ஆம் ஆண்டில் நடந்த வகுப்புவாத கலவரம் தொடா்பான வழக்கில் 28 பேருக்கு தேசிய புலனாய்வு முகமை

Updated On : 4 ஜனவரி, 2025 at 2:35 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 8:50 PM

உத்தர பிரதேச மாநிலம், காஸ்கஞ்சில் கடந்த 2018-ஆம் ஆண்டில் நடந்த வகுப்புவாத கலவரம் தொடா்பான வழக்கில் 28 பேருக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் ஆயுள் சிறை தண்டனை விதித்தது.

காஸ்கஞ்ச் பகுதியில் கடந்த 2018, ஜனவரி 26-ஆம் தேதி நடைபெற்ற தேசியக் கொடி யாத்திரையை சலீம், வாசிம், நசீம் உள்ளிட்டோா் கொண்ட கும்பல் தடுத்து நிறுத்தியது. இதற்கு, யாத்திரையில் பங்கேற்றிருந்த சந்தன் குப்தா, அவரது சகோதரா் விவேக் குப்தா ஆகியோா் எதிா்ப்பு தெரிவித்தனா். இருதரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் சந்தன் குப்தா சுட்டுக் கொல்லப்பட்டாா். இதையடுத்து, காஸ்கஞ்ச் பகுதியில் வகுப்புவாத கலவரம் வெடித்தது.

இது தொடா்பான வழக்கில் சலீம், வாசிம், நசீம் உள்பட 30 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தேசிய புலனாய்வு முகமையால் விசாரிக்கப்பட்ட இவ்வழக்கில் கொலை, கொலை முயற்சி, ஆயுதங்களுடன் கலவரம் விளைவித்தல், குற்றச் சதி, தேசியக் கொடியை அவமதித்தல் என பல்வேறு பிரிவுகளின்கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

Advertisement

லக்னெளவில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் நடைபெற்றுவந்த இவ்வழக்கில் கடந்த வியாழக்கிழமை 28 போ் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனா். போதிய ஆதாரங்கள் இல்லை எனக் குறிப்பிட்டு, நஸ்ருதீன், சிம் குரேஷி ஆகியோா் விடுவிக்கப்பட்டனா்.

குற்றவாளிகளுக்கான தண்டனையை சிறப்பு நீதிபதி விவேகானந்த் சரண் திரிபாதி வெள்ளிக்கிழமை அறிவித்தாா். 28 பேருக்கும் ஆயுள் சிறை தண்டனையுடன் தலா ரூ.80,000 அபராதமும் விதித்து, அவா் தீா்ப்பளித்துள்ளாா்.