திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் 6 பேர் பலியானதைத் தொடர்ந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று(வியாழக்கிழமை) திருப்பதி செல்கிறார்.
திருப்பதி திருமலையில் வைகுண்ட ஏகாதசியின்போது ஏழுமலையானை தரிசிக்க, வைகுண்ட வாயில் வழியாகச் செல்ல புதன்கிழமை இரவு 9 மணி அளவில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டபோது அவர்கள் முண்டியடித்துக்கொண்டு செல்ல முயன்றனர்.
அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு மூச்சுத் திணறலால் பலர் மயக்கமடைந்தனர். அவர்களில் சுமார் 25-க்கும் மேற்பட்டோர் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதி ருயா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 6 பேர் உயிரிழந்தனர்.
இவர்களில் தமிழகத்தின் சேலத்தைச் சேர்ந்த மல்லிகா உள்பட 5 பெண்கள் அடங்குவர். பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு ஆறுதல் கூறினார். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து இன்று அவர் திருப்பதி திருமலை தேவஸ்தானுக்கு சென்று இந்த சம்பவம் தொடர்பாக ஆய்வு நடத்தவிருக்கிறார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரையும் சந்திக்கவிருக்கிறார்.
திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.