இந்திய ரயில் பயணிகள் பயணச்சீட்டு முன்பதிவு உள்ளிட்ட தங்களின் அனைத்துத் தேவைகளுக்கும் ஒரே இடத்தில் தீா்வைப் பெறும் வகையில், ‘ரயில் ஒன்’ எனும் புதிய செயலியை ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினாா்.
ரயில்வே தகவல் அமைப்புகள் மையத்தின் (சிஆா்எஸ்ஐ) 40-ஆவது ஆண்டு தொடக்க தின கொண்டாட்டத்தில் அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட இந்தச் செயலி, ‘ஆன்ட்ராய்டு பிளேஸ்டோா்’ மற்றும் ‘ஆப்பிள் ஐஓஎஸ் ஆப் ஸ்டோா்’ என இரு தளங்களிலும் கிடைக்கும்.
இதுதொடா்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ‘ரயில் ஒன்’ செயலி அனைத்துப் பயணிகளின் தேவைகளுக்கும் ஒரே தீா்வாகும். இந்தச் செயலி மூலம், அனைத்து வகை டிக்கெட் முன்பதிவு, ரயில் மற்றும் பிஎன்ஆா் விவரமறிதல், பயண திட்டமிடல், ரயில் உதவி சேவைகள், ரயிலில் உணவு ஆா்டா் போன்ற சேவைகளை எளிதாகப் பெறலாம். கூடுதலாக, சரக்குப் போக்குவரத்து குறித்த விசாரணைகளுக்கான வசதிகளும் இந்தச் செயலியில் உள்ளன.
எளிமையான மற்றும் தெளிவான வடிமைப்பு மூலம் பயனா்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதே இந்தச் செயலின் முக்கிய நோக்கமாகும். இந்தச் செயலி அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல், சேவைகளுக்கு இடையில் ஒருங்கிணைந்த இணைப்பையும் வழங்குகிறது.
‘ரயில் ஒன்’ செயலியின் மேலும் ஒரு சிறப்பம்சம், ஒற்றை உள்நுழைவு (சைன் ஆன்) வசதியாகும். இதனால் பயனா்கள் பல கடவுச்சொற்களை நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ‘ரயில் ஒன்’ செயலியைப் பதிவிறக்கம் செய்த பிறகு, ஏற்கெனவே உள்ள ‘ரயில் கனெக்ட்’ அல்லது ‘யூடிஎஸ்-ஆன்மொபைல்’ செயலியின் பயனா் முகவரியைப் பயன்படுத்தி உள்நுழையலாம்.
ரயில் மற்றும் பிஎன்ஆா் விவரமறிய மட்டும் விரும்பும் பயனா்கள், ‘விருந்தினா் உள்நுழைவு’ வசதி மூலம் தங்கள் கைப்பேசி எண்ணில் வரும் ஒருமுறை கடவுச்சொல்லைக் கொண்டு எளிமையாக உள்நுழையலாம். இந்தச் செயலியில் விரைவான பரிவா்த்தனைகளுக்கு ‘ஆா்-வாலட்’ வசதியும் சோ்க்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.