மும்பையில் ஹிந்தி திணிப்புக்கு எதிரான வெற்றி பேரணியில் சிவசேனை(யுபிடி) தலைவர்உத்தவ் தாக்கரே, அவரது சகோதரர் ராஜ் தாக்கரே ஆகிய இருவரும் ஒன்றாக கலந்துகொண்டுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் தேசிய கல்விக் கொள்கையின்கீழ் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை 3-வது மொழியாக ஹிந்தி திணிக்கப்பட்டதற்கு சிவசேனை(யுபிடி) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை தலைவர் ராஜ் தாக்கரே ஆகிய இருவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
பாஜக கூட்டணிக்கு எதிராக இருப்பவர்கள், மக்கள் நலன் விரும்புபவர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று இருவருமே பேசி வந்தனர்.
இந்நிலையில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக மும்பையில் ஜூலை 5-ஆம் தேதி உத்தவ் தாக்கரேயும் ராஜ் தாக்கரேயும் ஒன்றாகப் பேரணி மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்தனர். ஆனால் அதற்கு முன்னதாகவே மகாராஷ்டிர அரசு பள்ளிகளில் ஹிந்தி 3-ம் மொழி என்ற உத்தரவை வாபஸ் பெற்றுள்ளது.
இதையொட்டி மும்பையில் இன்று தாக்கரே சகோதரர்கள் அறிவித்த பேரணி வெற்றி பேரணியாக மாறியுள்ளது. இருவரும் ஒரே மேடையில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர். இருவரும் கைகோர்த்து கட்டியணைத்து தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டுள்ளனர்.
"ஹிந்தி வெறும் 200 ஆண்டு கால வரலாறு கொண்ட மொழி. ஹிந்தி பேசாத மாநிலங்கள் மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளன. 3-வது மொழிக்கு இந்தியாவில் என்ன தேவை உள்ளது? ஹிந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்" என ராஜ் தாக்கரே பேசியுள்ளார்.
ஹிந்திக்கு எதிரான போராட்டத்தில் தாக்கரே சகோதரர்கள் இருவரும் இணைந்துள்ளது மகாராஷ்டிர அரசியலில் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.
தாக்கரே சகோதரர்கள்
சிவசேனை கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே. பால் தாக்கரேவின் இளைய சகோதரர் ஸ்ரீகாந்த் தாக்கரேவின் மகன்தான் ராஜ் தாக்கரே.
ராஜ் தாக்கரே சிவசேனை கட்சியில் இருந்து 2006-ஆம் ஆண்டு விலகி, மகாராஷ்டிர நவநிா்மாண் சேனையை தொடங்கினார். ‘மண்ணின் மைந்தன்’ என்ற முழக்கத்துடன் மிக கடுமையான பிரசாரங்களை மேற்கொண்டாா்.
கடந்த 2009-இல் நடைபெற்ற மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் 13 தொகுதிகளில் எம்என்எஸ் வெற்றி பெற்றது. அதன்பிறகு நடைபெற்ற மற்ற தோ்தல்களில் அவரது கட்சி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
கடந்த ஆண்டு நடைபெற்ற பேரவைத் தோ்தலில் ஓரிடத்தில்கூட எம்என்எஸ் வெற்றி பெறாமல் பெரும் பின்னடைவைச் சந்தித்தது.
அதேபோல் தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணியில் தோ்தலை சந்தித்த சிவசேனை (உத்தவ் பிரிவு) 20 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
மும்பை மாநகராட்சி தோ்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தாக்கரே சகோதரர்கள் ஓரணியில் இணைய வாய்ப்புள்ளது. இது வரும் தேர்தல்களிலும் மஹாராஷ்டிர அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.