குஜராத் பால விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் வதோதராவின் பத்ரா தாலுகாவில் உள்ள கம்பீரா பாலத்தின் ஒரு பகுதி இன்று(புதன்கிழமை) காலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அப்போது பாலத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு லாரிகள், இரண்டு பிக்-அப் வேன், ஒரு ரிக்ஷா ஆகியவை ஆற்றில் விழுந்தன.
வாகனங்களில் இருந்தவர்களை மீட்கும் பணியில் காவல்துறையினர், மீட்புக் குழுவினர் மற்றும் அப்பகுதி மக்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. உயிருடன் 9 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த விபத்துக்கு முதல்வர் பூபேந்திர படேல், இரங்கல் தெரிவித்துள்ளதுடன் விபத்து குறித்து உடனடியாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்க மோடி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மோடி, "குஜராத் பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டும்" என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.