பிரதமர் நரேந்திர மோடிக்கு நமீபியாவின் உயரிய விருது அளிக்கப்பட்டுள்ளது. நமீபியா குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பழைமை வாய்ந்த வெல்விட்சியா மிரபலீஸ் விருது பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்டுள்ளது.
உலக அமைதி, நீதி மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றத்தில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. நமீபியாவின் அதிபர் நெடும்போ நந்தி டைய்த்வாஹ் இந்த விருதை அவருக்கு அளித்தார்.
இது பிரதமர் மோடி பெறும் 27வது சர்வதேச விருதாகும். இதேபோன்று தற்போது மேற்கொண்டுள்ள பயணத்தில் இவர் பெறும் 4வது விருது இதுவாகும்.
இந்த விருது வழங்கும் விழாவில் நமீபியாவின் அதிபர் டைய்த்வாஹ் பேசியதாவது,
''நமீபியா மட்டுமின்றி உலகளவில் சமூக பொருளாதார முன்னேற்றம், அமைதி மற்றும் நீதியை மேம்படுத்துதல் போன்ற செயல்களில் சிறப்பான பங்களிப்பு அளித்ததற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நமீபியா குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான மிகப் பழைமை வாய்ந்த வெல்விட்சியா மிரபலீஸ் விருது அளிக்கப்பட்டது'' எனக் குறிப்பிட்டார்.
விருதை பெற்றுக்கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது,
''நமீபியாவின் மிக உயரிய விருது எனக்களிக்கப்பட்டதை பெருமையாகவும் கெளரவமாகவும் கருதுகிறேன். நமீபியாவின் அதிபர், அரசாங்கம் மற்றும் நமீபியா குடிமக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 140 கோடி இந்திய மக்களின் சார்பாக இந்த விருதை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்'' எனக் குறிப்பிட்டார்.
மேலும், இந்தியா - நமீபியா இடையிலான உறவு குறித்துப் பேசிய மோடி,
''இந்தியாவிற்கும் நமீபியாவிற்கும் இடையிலான நட்புக்கு இது ஒரு சாட்சி, இன்று அதனுடன் இணைந்திருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
இந்த விருதை நமீபியா - இந்திய மக்களுக்கும், அவர்களின் தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கும், இரு நாடுகளுக்கு இடையிலான நட்புக்கும் அர்ப்பணிக்கிறேன்.
ஒரு உண்மையான நண்பர் கடினமான காலங்களில் மட்டுமே அங்கீகரிக்கப்படுகிறார். இந்தியாவும் நமீபியாவும் தங்கள் சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்தே ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து வருகின்றன.
எங்கள் நட்பு அரசியலில் இருந்து பிறந்ததல்ல; போராட்டம், ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கையிலிருந்து பிறந்தது. எதிர்காலத்திலும், இரு நாடுகளும் கைகோர்த்து வளர்ச்சிப் பாதையில் முன்னேறும்'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | இரு பாலிவுட் நடிகர்களின் பூர்விக வீடுகளை மீட்டெடுக்க பாகிஸ்தான் அரசு ரூ.3.38 கோடி ஒதுக்கீடு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.