மும்பை: கணவருக்கு, தன்னுடைய மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, குழந்தைக்கு டிஎன்ஏ சோதனை செய்ய அனுமதிக்க முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும், விதிவிலக்கான வழக்குகளில், ஒரு குழந்தையின் தந்தையை உறுதி செய்வதற்காக மட்டுமே டிஎன்ஏ சோதனை நடத்தப்படுகிறது என்றும் நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.
கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குடும்ப நல நீதிமன்றம், சிறுவனுக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த அனுமதியளித்துப் பிறப்பித்த உத்தரவை, நீதிபதி ஆர்எம் ஜோஷி ரத்து செய்தார்.
தனது மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில், அவருக்கு விவாகரத்து வழங்க, கணவர் முடிவெடுத்துள்ளார். ஆனால், இதற்காக சிறுவனுக்கு டிஎன்ஏ சோதனை நடத்த உத்தரவிட முடியாது.
இந்த வழக்கில், சிறுவனுக்கு டிஎன்ஏ சோதனைக்கு உத்தரவிடுவதுதான் ஒரே வழியா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், நேரடியான பதில் இல்லை என்பதே. இந்த வழக்கில், மனைவியின் நடத்தையை வெளிப்படுத்த குழந்தைக்கு டிஎன்ஏ சோதனையைத் தவிர்த்து வேறு ஆதாரங்களை அவர் நீதிமன்றத்தில் காட்டலாமே என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைக்கு டிஎன்ஏ சோதனை நடத்த அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து, சிறுவன் சார்பில், மனைவி மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த தீர்ப்பை பிறப்பித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.