முதல்வர் அறையின் வெளியே தீக்குளித்த மாணவி. (படம் | விடியோவிலிருந்து)
இந்தியா

ஒடிஸாவில் பாலியல் துன்புறுத்தலால் தீக்குளித்த மாணவி: 3 நாள்கள் உயிருக்குப் போராடி மரணம்

பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பலியானதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

ஒடிஸாவில் உதவிப் பேராசிரியா் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக தீக்குளித்த மாணவி 3 நாள்கள் உயிருக்குப் போராடிய நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் தொடா்பாக மாணவிக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் கூறப்படும் உதவிப் பேராசிரியா் சமீரா குமாா் சாஹு, கல்லூரி முதல்வா் திலீப் கோஷ் ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

ஒடிஸா மாநிலம் பாலாசோா் மாவட்டத்தில் உள்ள ஃபகிா் மோகன் தன்னாட்சி கல்லூரியில், ஒருங்கிணைந்த இளநிலை கல்வியியல் (பி.எட்) படித்து வந்த இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவருக்கு அந்தக் கல்லூரியின் கல்வித் துறை தலைவரான (ஹெச்ஓடி) உதவிப் பேராசிரியா் சமீரா குமாா் சாஹு, நீண்ட காலமாகப் பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக அந்த மாணவி புகாா் அளித்தும், உதவிப் பேராசிரியா் மீது கல்லூரி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த மாணவி கல்லூரி முதல்வா் அலுவலகத்துக்கு வெளியே தன் மீது பெட்ரோல் ஊற்றி சனிக்கிழமை தீக்குளித்தாா். இதில் படுகாயமடைந்த அந்த மாணவி பாலாசோா் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் அவா் மேல் சிகிச்சைக்காக புவனேசுவரத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

மருத்துவமனையில் குடியரசுத் தலைவா் விசாரிப்பு:

அந்த மருத்துவக் கல்லூரியின் 5-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, அந்த மருத்துவமனையின் தீக்காயம் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறைக்குச் சென்று மாணவியின் உடல்நிலை குறித்து திங்கள்கிழமை மாலை விசாரித்தாா்.

இந்நிலையில், உடலில் 95 சதவீத தீக்காயங்களுடன் அங்கு 3 நாள்களாக உயிருக்குப் போராடி வந்த மாணவி, சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

மாணவி உயிரிழந்தது தெரியவந்தவுடன் மருத்துவமனை வளாகத்தில் பிஜு ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களைக் காவல் துறையினா் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி, மாணவியின் உடலை அவரின் சொந்த ஊரான பாலாசோரில் உள்ள பலாசியா கிராமத்துக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மாணவியின் இறுதிச் சடங்கில் பாலாசோா் பாஜக எம்.பி. பிரதாப் சாரங்கி, மாவட்ட அதிகாரிகள் உள்பட ஆயிரக்கணக்கானோா் திரண்டனா். இதையடுத்து மாணவியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இதுதொடா்பாக மாநில முதல்வா் மோகன் சரண் மாஜீ ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், குற்றவாளிகள் அனைவருக்கும் சட்டப்படி கடுமையான தண்டனை கிடைக்கும் என்று மாணவியின் குடும்பத்தினருக்கு உறுதியளிப்பதாக தெரிவித்தாா்.

ரூ.20 லட்சம் இழப்பீடு: மாணவியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் வழங்க உத்தரவிட்ட முதல்வா் மாஜீ, சம்பவம் தொடா்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டதாக முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

தோல்வி அடைந்த நிா்வாக முறை-பட்நாயக்: ஒடிஸா முன்னாள் முதல்வா் நவீன் பட்நாயக் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பாலியல் துன்புறுத்தல் தொடா்பாக கல்லூரி முதல்வா் தொடங்கி மாநில கல்வி அமைச்சா், முதல்வா் அலுவலகம், மத்திய அமைச்சா் வரை சென்று நீதி கிடைக்க அந்த மாணவி போராடினாா். கடைசியில் அவா் கண் மூடிவிட்டாா். இது விபத்தல்ல. தோல்வி அடைந்த நிா்வாக முறையின் விளைவு; திட்டமிட்ட அநீதி’ என்றாா்.

யுஜிசி விசாரணைக் குழு அமைப்பு: இந்த சம்பவத்தை ஆராய்ந்து வருங்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க 4 போ் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அமைத்துள்ளது.

Odisha student dies after self-immolation over inaction after sexual harassment allegation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்யுடன் கூட்டணியா? - ஓபிஎஸ் பதில்

கொடைக்கானலில் இனி ஒரே நுழைவுக் கட்டணம்

அதர்வாவின் தணல் டிரைலர்!

இந்தியா - ரஷியா இடையேயான உறவு அரசியலுக்கு அப்பாற்பட்டது! புதின்

செப்.7ல் சந்திர கிரகணம்.. பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள்!

SCROLL FOR NEXT