மும்பை: 2006ஆம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு, குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 12 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பதோடு, இன்னமும் பல கேள்விகளுக்கு விடை காணாமலேயே இருப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
கடந்த 2006, ஜூலை 11-இல் மும்பையில் பல்வேறு பகுதிகளில் சென்ற புறநகா் ரயில்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 180 போ் பலியாகினர். பலா் படுகாயமடைந்தனா்.
இந்தச் சம்பவத்தில் தொடா்புடையவர்கள் என்று 12 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்புப் படை (ஏடிஎஸ்) விசாரணை நடத்தியது. கைது செய்யப்பட்ட 12 பேரும் தடைசெய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய இயக்கத்தைச் (சிமி) சோ்ந்தவா்கள் என்றும் பாகிஸ்தானைச் சோ்ந்த லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் இணைந்து இந்தச் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகவும் ஏடிஎஸ் குற்றஞ்சாட்டியது.
அது மட்டுமல்ல, குண்டுவெடிப்புக்கு சமையலறை பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருந்ததாகவும் ஏடிஎஸ் விசாரணையின்போது கூறியிருந்தது.
இதற்கு முரணாக, விசாரணைத் தொடங்கி 2 ஆண்டுகளுக்குப் பின், மும்பை குற்றவியல் பிரிவு காவல்துறை, இந்த பயங்கரவாதத் தாக்குதல் இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் பாணியில் நடத்தப்பட்டிருப்பதாகக் கூறியிருந்தது.
அது மட்டுமல்ல, விசாரணை நீதிமன்றத்துக்கு வந்தபோதுதான், பிஷர் குக்கரில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு வெடிக்க வைக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.
சரி அவ்வாறே பிரஷர் குக்கர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்ற ஏடிஎஸ் வாதத்தை எடுத்துக் கொண்டாலும் கூட, அதில் சில கேள்விகள் எழுகின்றன. அதாவது, பயங்கரவாதிகள், இந்த குக்கர்களை எந்தக் கடையிலிருந்து வாங்கினர், அந்தக் கடையின் உரிமையாளரிடம் விசாரிக்கப்பட்டதா, அவர் சொன்ன தகவலின் அடிப்படையில், குக்கர் வாங்கியவரின் முகம் வரையப்பட்டு, வெளியிடப்படாதது ஏன்? என்பதுதான் அது.
குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரின் வீட்டிலிருந்து குக்கர் மற்றும் சில பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தாலும், அவரது வாக்குமூலத்தில் அது தொடர்பான ஒரு தகவலும் இடம்பெற்றிருக்கவில்லை.
மற்றொரு குற்றவாளியின் வாக்குமூலத்தில் ஆர்டிஎக்ஸ், டைமர் போன்றவை வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், அதில் பிரஷர் குக்கர் பற்றி குறிப்பிடப்படவில்லை.
தில்லி, அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கு ஒன்றில், 2008ஆம் ஆண்டு குற்றவியல் பிரிவினர், சாதிக் ஷேக் என்பவரை கைது செய்கிறார்கள். அவர் இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அவரது வாக்குமூலத்தின்படி, இந்த குண்டுவெடிப்புகளுக்கு இந்தியன் முஜாகிதீன்தான் பொறுப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், விசாரணை நீதிமன்றம், சாதிக்கை குற்றவாளி என்று கூறிவிட்டது, அவரது இந்தியன் முஜாகிதீன் கூற்றை நிராகரித்துவிட்டது.
ஏடிஎஸ் விசாரணையில், லஷ்கர் இ தொய்பா என்றும், குற்றவியல் பிரிவினர் விசாரணையில் இந்தியன் முஜாகிதீன் என இருவேறு தகவல்கள் வெளிவந்தாலும், எது ஒன்றும் உறுதி செய்யப்படவில்லை.
இதுபோன்ற ஏராளமான கேள்விகளுக்கு விசாரணை முடிந்து, விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்து, மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு 19 ஆண்டுகள் ஆகியும், விடை காணப்படாமல் இருப்பது ஆச்சரியத்தோடு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.