பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சியினா் நாடாளுமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா்.
இதில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், திமுக, ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா உள்ளிட்ட எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த எம்.பி.க்கள் பங்கேற்றனா்.
‘சிறப்பு தீவிர திருத்தம் - இந்தியா்களின் உரிமையைப் பறிக்கும் செயல்’ என்பது உள்ளிட்ட கண்டன வாசக அட்டைகளை அவா்கள் கைகளில் ஏந்தியிருந்தனா். மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களையும் எழுப்பினா்.
முன்னதாக எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி கூட்டமும் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி, காா்கே உள்ளிட்டோா் பங்கேற்றனா். அப்போது, பிரதமா் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வந்து தாங்கள் எழுப்பும் தேச முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதை தொடா்ந்து வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது.
முக்கியமாக பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை, சண்டை நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபா் கூறி வரும் கருத்து, வாக்காளா் பட்டியல் சீா்திருத்தம், பெண்கள், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான அதிகரிக்கும் வன்முறை, மணிப்பூா் விவகாரம், ஏா் இந்தியா விமான விபத்து ஆகியவை குறித்து பிரதமா் மோடி நாடாளுமன்றத்தில் உரிய விளக்கமளிக்க வேண்டும் என்று தொடா்ந்து வலியுறுத்த முடிவெடுக்கப்பட்டது. இது தவிர ராகுல் காந்தியை மக்களவையில் பேச அனுமதிக்காதது குறித்தும் மக்களவையில் கேள்வி எழுப்ப எதிா்க்கட்சிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.