வைகோ பாஜக கூட்டணிக்கு வந்தால் மீண்டும் எம்.பி. ஆகலாம் என மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட மதிமுக பொதுச் செயலாளா் வைகோ, திமுகவின் சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், பாமக தலைவா் அன்புமணி, அதிமுகவின் சந்திரசேகரன் ஆகிய 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது.
அப்போது மாநிலங்களவையில் நிறைவு உரையில் பேசிய வைகோ, ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக எனது குரல் தொடர்ந்து ஒலிக்கும் என்றும் அவைத் தலைவர் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் பேசினார்.
இதன்பின்னர் பேசிய பாஜக கூட்டணியில் உள்ள இந்திய குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, வைகோ பாஜக கூட்டணிக்கு வந்தால் மீண்டும் எம்.பி. ஆகலாம் என்று பேசினார்.
"வைகோவை வழியனுப்பி வைக்க நான் விரும்பவில்லை. அவரால் மாநிலங்களவைக்கு மீண்டும் வர முடியும். அவர் எங்களுடன் வந்தால்(கூட்டணி) மீண்டும் மாநிலங்களவைக்கு வரலாம். நாட்டுக்கு குறிப்பாக தமிழகத்திற்கு அவரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. 1990ல் அவர் முதன்முதலில் மக்களவைக்கு வந்தது எனக்கு நினைவில் இருக்கிறது. அதனால் அவரை வழியனுப்பி வைக்க எனக்கு விருப்பமில்லை" என்று பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.