புது தில்லி: ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் என்ஜினை உருவாக்கி, ஐசிஎஃப் தொழிற்சாலையில் இயக்கிப் பார்த்து வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் ரயில் என்ஜின்களைத் தயாரிக்க மத்திய ரயில்வேத் துறை ரூ. 2,000 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கியுள்ளது. இதையடுத்து சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப்-இல் ஹைட்ரஜன் ரயில் என்ஜின் தயாரிக்கும் பணி கடந்த 2024-ஆம் ஆண்டு தொடங்கியது. தற்போது ஹைட்ரஜன் ரயில் என்ஜின் தயாரிப்புப் பணி நிறைவடைந்து சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது.
ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் என்ஜின், தண்டவாளத்தில் இயக்கப்படும் விடியோவை, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் அஸ்வினி வைஷ்ணவ், ஹைட்ரஜன் மூலம் இயங்கும் முதல் ரயில் என்ஜின், சென்னை ஐசிஎஃப் ரயில் பெட்டி தயாரிப்புத் தொழிற்சாலையில் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது.
இந்தியா 1,200 ஹெச்பி திறனுடன் இயங்கும் ஹைட்ரஜன் ரயிலை உருவாக்கி வருகிறது. இது ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள நாடுகளில் இந்தியாவை இடம்பெறச் செய்யும் என்று பதிவிட்டுள்ளார்.
கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்து சுற்றுச்ழலுக்கு உகந்ததாக ஹைட்ரஜனில் இயங்கும் ரயில்கள் இருக்கும் என்பதால், இதன் உருவாக்கம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் முதல் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக செய்து பார்க்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து தயாரிப்புகள் வேகம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1200 குதிரைத் திறன் கொண்ட ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் என்ஜினை தயாரித்து வருகிறது இந்திய ரயில்வே. இது, ரயில்வேயின் புத்தாக்கத்துக்கு மணிமகுடமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பல நாடுகளில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் தொழில்நுட்பம் பயன்பாட்டில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டிலேய முதன்முறையாக இந்த ஹைட்ரஜன் ரயில்கள், வடக்கு ரயில்வே கோட்டத்தில் உள்ள ஜிந்த் ரயில் நிலையத்துக்கும் சோனிபேட் ரயில் நிலையத்துக்கும் இடையே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.