ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பயங்கரவாத ஆதரவாளர்கள் தப்பிக்க இயலாது என்ற தெளிவான செய்தியை பாகிஸ்தானுக்கு அளித்ததாக இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி கூறியுள்ளார்.
1999ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ம் தேதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீரின் கார்கிலில் அமைக்கப்பட்டுள்ள கார்கில் நினைவு தூணில் போரில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி இன்று மரியாதை செலுத்தினார். அப்போது அவர் கூறியதாவது,
ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தானுக்கு ஒரு செய்தியாகவும், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாகவும், முழு நாட்டிற்கு இது ஆழமான காயமாக இருந்தது.
இந்தமுறை இந்தியா துக்கம் அனுசரிக்கவில்லை, அதற்குப் பதில் தீர்க்கமானதாக இருக்கும் என்று காட்டியது. நாட்டு மக்கள் காட்டிய நம்பிக்கையாலும், அரசாங்கத்தின் சுதந்திரத்தாலும், இந்திய ராணுவம் தகுந்த பதிலடியை வழங்கியுள்ளது.
இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்குச் சவால் விடும், மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு சக்திக்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.
இது இந்தியாவின் புதிய இயல்பு.. சிந்தூர் நடவடிக்கையின் போது, பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத தளங்களையும், பயங்கரவாத உள்கட்டமைப்பையும் இந்திய ராணுவம் திறம்பட அழித்து தீர்க்கமான வெற்றியைப் பெற்றது.
பாகிஸ்தானுக்கு இந்தியா ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால் அவர்கள் கோழைத்தனத்தையே நாடினர். மே 8,9 தேதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்திய ராணுவம் திறம்படப் பதிலடி கொடுத்தது அவர்களுக்குப் புரிந்து இருக்கும். எந்த ஏவுகணை ட்ரோன்களாலும் அழிக்க முடியாத என்ற அசைக்கமுடியாத சுவரைப் போல நின்றது
இந்திய ராணுவம். உலகளவில் வலிமையான சக்தியாக இந்திய ராணுவம் மாறி வருகின்றது. ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகளை உள்நாட்டு ஏவுகணைகளுடன் பொருத்தி வருவதால், வரும் நாள்களில் எங்களது திறன் பன்மடங்கு அதிகரிக்கும் என்று ராணுவ தளபதி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.