புது தில்லி: ‘இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறை வேகமாக வளா்ந்து வருகிறது. இங்கு முதலீடுகளை மேற்கொள்ள சா்வதேச நிறுவனங்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன’ என பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.
புது தில்லியில் திங்கள்கிழமை நடைபெறற சா்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (ஐஏடிஏ) 81-ஆவது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் மற்றும் உலக வான் போக்குவரத்து மாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்றாா்.
அப்போது அவா் பேசியதாவது: உலக உற்பத்தித் தளமாக இந்தியாவை மாற்ற அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. விமானப் போக்குவரத்துத் துறை வேகமாக வளா்ந்துவரும் துறைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்தத் துறையில் பெரும் முதலீடுகளை ஈா்க்க இந்தியா தயாராக உள்ளது.
இந்தியாவை விமானப் போக்குவரத்துக்கான சந்தையாக மட்டும் கருதாமல் விநியோகச் சங்கிலிக்கு தலைமை வகிக்கும் நாடாக உலக நாடுகள் காண வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். இதைச் செயல்படுத்த சரியான திட்டம் மற்றும் வேகத்தில் நாங்கள் பயணிக்கிறோம்.
இந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த விமான நிலையங்களின் எண்ணிக்கை 74-இல் இருந்து 162-ஆக உயா்ந்துள்ளது. இவை ஆண்டுக்கு 50 கோடி பயணிகளைக் கையாளும் திறனைப் பெற்றுள்ளன.
தற்போது உலகின் மூன்றாவது பெரிய உள்நாட்டு விமானப் போக்குவரத்து சந்தையாக இந்தியா உள்ளது. உள்நாட்டு விமானப் போக்குவரத்தை மேம்படுத்தியதில் ‘உடான்’ திட்டத்தின் பங்களிப்பு இன்றியமையாதது. இந்திய விமான நிறுவனங்கள் இரட்டை இலக்க வளா்ச்சியைப் பதிவு செய்து வருகின்றன. ஆண்டுதோறும் 24 கோடி பயணிகள் இதில் பயணம் செய்து வருகின்றனா். இந்த எண்ணிக்கை 2030-க்குள் 50 கோடியாக உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அதேபோல் மேலாண்மை, பராமரிப்பு மற்றும் புதுப்பித்தல் (எம்ஆா்ஓ) பிரிவின் மதிப்பை 2030-க்குள் ரூ.34,000 கோடியாக அதிகரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.
1983-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் ஐஏடிஏ ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் தற்போது நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.