விபத்தில் உயிரிழந்த மருத்துவர் பிரதீக் ஜோஷி மற்றும் குடும்பத்தினர். படம்: X
இந்தியா

கடைசி செல்ஃபி! லண்டன் கனவுடன் புறப்பட்ட மருத்துவ தம்பதியின் கதை...

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த மருத்துவ தம்பதி மற்றும் குழந்தைகள் பற்றி...

DIN

அகமதாபாத் விமான விபத்தில் உதய்ப்பூரைச் சேர்ந்த மருத்துவ தம்பதி மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் பலியாகினர்.

அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நேற்று பிற்பகல் விபத்துக்குள்ளானதில், விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்தனர்.

அவர்களில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவைச் சேர்ந்த மருத்துவர் பிரதீக் ஜோஷி, அவரது மனைவியும் மருத்துவருமான கோமி வியாஸ் மற்றும் 3 குழந்தைகளும் அடங்குவர்.

இவர்கள் விமானத்துக்குள் அமர்ந்தபடி, சிரிப்புடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் பரவி கண்போரை கலங்கடித்து வருகின்றது.

லண்டனில் குடியேறும் கனவு

பன்ஸ்வாராவரைச் சேர்ந்த மருத்துவர் பிரதீக் ஜோஷி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக லண்டனுக்குச் சென்று தனது மருத்துவப் பணியைத் தொடர்ந்து வந்தார்.

தற்போது நீண்ட முயற்சிகளுக்கு பிறகு, தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளையும் (ஒரு பெண், இரண்டு ஆண் குழந்தைகள்) லண்டனுக்கு அழைத்துச் சென்று குடும்பத்தோடு குடியேற திட்டமிட்டிருந்தார்.

லண்டனில் வீட்டை ஏற்பாடு செய்ததுடன், குழந்தைகளின் கல்விக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, அவர்களை அழைத்துச் செல்வதற்காக இந்தியாவுக்கு ஒரு மாதத்துக்கு முன்னதாகவே வந்துள்ளார்.

மேலும், லண்டனில் குடியேறுவதற்கு தேவையான ஆடைகள், வீட்டு உபயோகப் பொருள்கள், குழந்தைகளுக்கு தேவையானவற்றை வாங்கி பேக்கிங் செய்துள்ளனர்.

பிரதீக்கின் மனைவி கோமி வியாஸ், உதய்ப்பூர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பணிபுரிந்து வந்த நிலையில், லண்டனில் குடியேறுவதற்கு வசதியாக வேலையை ராஜிநாமா செய்துள்ளார்.

இரண்டு நாள்களுக்கு முன்னதாக தனது நண்பர்களை சந்தித்த கோமி, லண்டன் செல்வது குறித்தும் அங்கு பணிபுரியப் போவது குறித்தும் மிக மகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.

சிதைந்த கனவு

இந்த நிலையில், பன்ஸ்வாராவிலிருந்து அகமதாபாத்துக்கு வந்த பிரதீக் - கோமி மற்றும் 3 குழந்தைகள், லண்டன் புறப்பட்ட விமானத்தில் தங்களின் ஆயிரமாயிரம் கனவுகள் நிறைவேறப்போகிறது என்று நினைத்துத்தான் ஏறியிருக்கிறார்கள்.

மூன்று குழந்தைகள் ஒரு புறத்திலும், பிரதீக் - கோமி அருகிலிருந்த இருக்கைகளிலும் அமர்ந்துள்ளனர்.

இந்தியாவைவிட்டு பிரிந்து, புதிய மண்ணில் புதிய வாழ்க்கையைத் தேடிச் செல்வதற்கான நினைவு பொக்கிஷமாக 5 பேரும் சிரித்தபடி செல்ஃபி ஒன்றை எடுத்துள்ளனர். அதனை குடும்பத்தாருக்கு அனுப்பியிருந்த நிலையில், அதுவே அவர்களது கடைசி செல்ஃபியாக மாறியிருக்கிறது.

விமானம் புறப்பட்ட சில நொடிகளில், அவர்களின் கனவு இந்தியாவிலேயே எரிந்து நாசமானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏவிசி கல்லூரியில் பாட்டுப்போட்டி

அரசினா் மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

100 அரசுப் பள்ளிகளில் மாணவா் மன்றங்கள் - தில்லி அரசு முடிவு

மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

பேருந்தில் தொடங்கியபடி பயணம்: கல்லூரி மாணவனின் கால் விரல்கள் துண்டிப்பு

SCROLL FOR NEXT