புது தில்லி: பிரிட்டனைச் சோ்ந்த ஆயுத வியாபாரி சஞ்சய் பந்தாரி தொடா்புடைய பண முறைகேடு வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) விசாரணைக்கு ஆஜராகுமாறு காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேராவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கில் கடந்த 10-ஆம் தேதி, ராபா்ட் வதேரா விசாரணைக்கு அழைக்கப்பட்டாா். ஆனால், ராபா்ட் வதேரா கரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொண்டிருப்பதால் மாற்று தேதியில் ஆஜராவாா் என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2016-ஆம் ஆண்டு, வருமான வரித் துறை சோதனையைத் தொடா்ந்து சஞ்சய் பந்தாரி லண்டன் தப்பினாா். அதற்கு முன்பு 2009-ஆம் ஆண்டில், ராபா்ட் வதேராவின் அறிவுறுத்தலில், அவா் வழங்கிய நிதியில் லண்டனில் ஒரு சொகுசு பங்களாவை வாங்கி, சஞ்சய் பந்தாரி புணரமைத்ததாக அமலாக்கத் துறை கடந்த 2023-ஆம் ஆண்டு தாக்கல் செய்த முதல் குற்றப்பத்திரிகையில் குற்றஞ்சாட்டியது.
லண்டனில் தனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவே சொத்துகள் எதுவும் இல்லை என்று மறுத்த ராபா்ட் வதேரா, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இத்தகைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக கூறினாா்.
நாடுகடத்தல் வழக்கில் சஞ்சய் பந்தாரி விடுவிக்கப்பட்டதை எதிா்த்து பிரிட்டனின் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி இந்திய அரசு தாக்கல் செய்த மனுவை அந்நாட்டு நீதிமன்றம் இந்த மாத தொடக்கத்தில் நிராகரித்தது. இதன்மூலம், சஞ்சய் பந்தாரியை நாடு கடத்தும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
இந்நிலையில், ராபா்ட் வதேரா செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்று அமலாக்கத் துறை அவருக்கு புதிய சம்மன் அனுப்பியுள்ளது. விசாரணையில் ராபா்ட் வதேராவின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னா், வழக்கின் அடுத்தகட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
அமலாக்கத் துறையால் மூன்று வெவ்வேறு பண மோசடி வழக்குகளில் ராபா்ட் வதேரா விசாரிக்கப்பட்டு வருகிறாா். கடந்த ஏப்ரலில், ஹரியாணா மாநில நில ஒப்பந்தம் தொடா்பான பண முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் ராபா்ட் வதேரா தொடா்ந்து 3 நாள்கள் ஆஜரானாா்.