கோப்புப்படம்  IANS
இந்தியா

அவசரநிலை 50 ஆண்டுகள் நிறைவு! மத்திய அமைச்சரவை தீர்மானம்!

அவசரநிலை 50 ஆண்டுகள் நிறைவு நாளையொட்டி, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.

DIN

அவசரநிலை பிரகடனம் செய்து 50 ஆண்டுகள் நிறைவையொட்டி, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரசு, கடந்த 1975 ஆம் ஆண்டு அவசரநிலையை பிரகடனம் செய்தது. இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், ”இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று” என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அவசரநிலையை துணிச்சலுடன் எதிர்த்த எண்ணற்ற தனிநபர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவசரநிலை 50 ஆண்டுகள் நிறைவையொட்டி, மத்திய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதில் தெரிவித்திருப்பதாவது:

”அவசரநிலையை துணிச்சலுடன் எதிர்த்த எண்ணற்றவர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து கௌரவிக்க மத்திய அமைச்சரவை தீர்மானித்தது. 1974 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நவநிர்மாண - முழுப் புரட்சி இயக்கத்தை நசுக்கும் முயற்சியாகவே அவசரநிலை தொடங்கியது.

அரசியலமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு, கற்பனை செய்ய முடியாத கொடூரங்களுக்கு ஆளானவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் இரண்டு நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்திய வரலாற்றில் அரசியலமைப்புச் சட்டம் சீர்குலைக்கப்பட்டு, இந்தியாவின் குடியரசு மற்றும் ஜனநாயக உணர்வு தாக்கப்பட்டு, கூட்டாட்சி குறைமதிப்புக்கு உட்படுத்தப்பட்டு, அடிப்படை உரிமைகள், சுதந்திரம் மற்றும் கண்ணியம் பறிக்கப்பட்ட மறக்க முடியாத அத்தியாயமாக அவசரநிலை காலகட்டம் உள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், நாட்டின் ஜனநாயக நெறிமுறைகளின் மீள்தன்மை மீதும் இந்திய மக்கள் தொடர்ந்து அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பதாக மத்திய அமைச்சரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

சர்வாதிகாரப் போக்குகளை எதிர்த்து, நமது அரசியலமைப்பையும் அதன் ஜனநாயகக் கட்டமைப்பையும் பாதுகாக்க உறுதியாக நின்றவர்களிடமிருந்து உத்வேகம் பெறுவது முக்கியம்.

ஜனநாயகத்தின் தாயான இந்தியா, அரசியலமைப்புச் சட்டத்தின் மதிப்புகளைப் பாதுகாப்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. நமது அரசியலமைப்பையும் அதன் ஜனநாயக மற்றும் கூட்டாட்சி உணர்வையும் நிலைநிறுத்துவதற்கு உறுதியேற்போம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தியா கடந்த 11 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத அவசரநிலையை சந்தித்து வருவதாகவும், அரசியலமைப்பு மீது 5 வகை தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெட்டாவுடன் இணைந்த தமிழக அரசு! இனி வாட்ஸ்-ஆப் மூலமே 50 சேவைகள் பெறலாம்!

ஆதிக்கத்தை எந்நாளும் எதிர்த்து நிற்போம்: துணை முதல்வர் உதயநிதி

மூவர் அரைசதம்: ஆஸி.யை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா ஏ மகளிரணி!

பாஜகவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி!

அடல் கேண்டீனில் ரூ. 5 -க்கு உணவு! தில்லி முதல்வர் அறிவிப்பு

SCROLL FOR NEXT