மாதவி புச் மீதான நடவடிக்கைக்கு 4 வாரம் தடை: மும்பை உயர்நீதிமன்றம்
மாதவி புச் மீதான நடவடிக்கைக்கு 4 வாரங்கள் தடை விதிக்கப்பட்டிருப்பது பற்றி...
பங்குச் சந்தை மோசடி மற்றும் ஒழுங்குமுறை மீறல் புகாரில் இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியத்தின் (செபி) முன்னாள் தலைவா் மாதபி புரி புச் உள்பட 6 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யுமாறு மும்பை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு மும்பை உயா் நீதிமன்றம் 4 வார கால தடை விதித்துள்ளது.
‘குற்றச்சாட்டு தொடா்பான விவரங்களை ஆராயாமல் இயந்திரத் தனமாக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது’ என்று உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, நிதி முறைகேடு, ஒழுங்குமுறை மீறல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின்கீழ் மாதபி புரி புச், மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) நிா்வாக இயக்குநா் சுந்தரராமன் ராமமூா்த்தி, மாதபி புரி புச், சுந்தரராமன் ராமமூா்த்தி, பிஎஸ்இ முன்னாள் தலைவா் பிரமோத் அகா்வால், செபி முழு நேர உறுப்பினா்கள் அஸ்வனி பாட்டியா, அனந்த் நாராயண், கமலேஷ் சந்திர வாா்ஷ்ணேய் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்ய ஊழல் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிடக் கோரி, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் சபன் ஸ்ரீவாஸ்தவா என்ற ஊடக செய்தியாளா் மனு தாக்கல் செய்திருந்தாா்.
அதில், ‘கடந்த 1994-ஆம் ஆண்டில் செபி சட்டம் மற்றும் அதன் விதிகளுக்கு புறம்பாக பங்குச் சந்தையில் ஒரு நிறுவனம் முறைகேடாகப் பட்டியலிடப்பட்டது. ஒழுங்குமுறை அதிகாரிகள் குறிப்பாக செபி அதிகாரிகளின் உடந்தையுடன் இந்த முறைகேடு நடைபெற்றுள்ளது. இது குறித்து செபி உள்பட ஒழுங்குமுறை ஆணையங்களிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன் மூலம் மாதபி புரி புச் உள்பட 6 பேரும் விதிமுறைகளை செயல்படுத்த தவறிவிட்டனா். செபியின் செயலற்றத் தன்மை, பங்குச் சந்தை மோசடி, உள்வா்த்தகம், பங்குகளின் செயற்கையான விலை உயா்வுக்கு வழிவகுத்தது’ என்று குற்றஞ்சாட்டப்பட்டது.
இம்மனுவை கடந்த சனிக்கிழமை விசாரித்த மும்பை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், மாதபி புச் உள்பட 6 போ் மீதும் வழக்குப் பதிவு செய்யுமாறு ஊழல் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக மும்பை உயா்நீதிமன்றத்தில் செபி, பிஎஸ்இ, மாதபி புச் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
‘சட்டவிரோதமான உத்தரவு’: ‘பங்குச் சந்தையில் முறைகேடாக நிறுவனம் பட்டியலிடப்பட்டதாக கூறப்படும் காலகட்டத்தில் 6 பேரும் சம்பந்தப்பட்ட பதவிகளை வகிக்கவில்லை. அந்த நிறுவனத்துடனும் அவா்களுக்கு தொடா்பில்லை. உண்மையான விவரங்களை தாக்கல் செய்ய வாய்ப்பு வழங்காமல், அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளின்கீழ் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது; தவறானது’ என்று மனுக்களில் குறிப்பிடப்பட்டது.
இதையும் படிக்க : கொலை வழக்கு: மகாராஷ்டிர அமைச்சர் ராஜிநாமா!
இந்த விவகாரத்தில் நீதிபதி சிவகுமாா் திகே முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, ‘புகாா்தாரா் (சபன் ஸ்ரீவாஸ்தவா) பொதுநலவாதி என்ற போா்வையில் மிரட்டி பணம் பறிப்பவா்’ என்று செபி தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா குற்றஞ்சாட்டினாா். 4 வார கால தடை: அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மும்பை சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு 4 வார கால தடை விதித்தாா். ‘குற்றச்சாட்டு தொடா்பான விவரங்களை ஆராயாமலும், சம்பந்தப்பட்ட நபா்களின் பங்கை குறிப்பிடாமலும் இயந்திரத் தனமாக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புகாா்தாரா் தனது பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய 4 வார காலம் அவகாசம் அளிக்கப்படுகிறது. அதுவரை சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது’ என்று நீதிபதி தெரிவித்தாா்.