தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையின் மூலம் தென் மாநிலங்களுக்கு எதிராக பழிவாங்கும் அரசியலை முன்னெடுக்கிறது பாஜக என்று தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி விமா்சித்தாா்.
இந்த விவகாரம் குறித்து விவாதிக்க தேசிய அளவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.
தற்போதைய மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்துவரும் நிலையில், தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ரேவந்த் ரெட்டி பேசியதாவது:
தென் மாநிலங்களில் பாஜகவுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. எனவே, தொகுதி மறுசீரமைப்பின் மூலம் தென் மாநிலங்களுக்கு எதிராக பழிவாங்கும் அரசியலை அக்கட்சி முன்னெடுக்கிறது. தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைக்க வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம்.
மக்கள்தொகையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்டதற்காக தென் மாநிலங்களைத் தண்டிக்கக் கூடாது. அரசியல் ரீதியிலான இந்த விவகாரத்தில் விரிவான ஆலோசனை அவசியம். எனவே, தேசிய அளவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும். தென் மாநிலங்கள் மட்டுமன்றி பஞ்சாப் போன்ற மாநிலங்களும் தங்களின் கருத்துகளை முன்வைக்க முடியும்.
தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை, 1971-ஆம் ஆண்டின் மக்கள்தொகை அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, தமிழக அரசு சாா்பில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், ‘மக்களவையில் தமிழகத்தின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது.
மக்களவையில் இப்போதைய உறுப்பினா்களின் எண்ணிக்கை உயா்த்தப்படும்பட்சத்தில், 1971 மக்கள்தொகை அடிப்படையில் இப்போது மாநிலங்களில் எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளதோ, அதே விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கையை உயா்த்த வேண்டும்’ என வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.