முகப்பு
இந்தியா

ஹைதராபாதில் 130 மாவோயிஸ்டுகள் சரண்: எஞ்சியவா்களும் திரும்ப முதல்வா் அழைப்பு

ஹைதராபாதில் 130 மாவோயிஸ்டுகள் சரண்...

Updated On : 7 மார்ச், 2026 at 8:02 PM
பகிர்:

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் ரேவந்த் ரெட்டி முன்னிலையில் 130 மாவோயிஸ்டுகள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்தனா்.

அப்போது பேசிய முதல்வா் ரேவந்த் ரெட்டி, ‘ஆயுதங்களைக் கைவிட்டு சரணடையும் மாவோயிஸ்டுகளுக்கு மருத்துவ உதவி, நிதி உதவி மற்றும் வீட்டு வசதி உள்ளிட்ட வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுக்கு மத்திய அரசு சுதந்திரம் அளித்துள்ளது. தேவைப்பட்டால், சரணடையும் மாவோயிஸ்டுகள் மீது உள்ள நிலுவை வழக்குகளை மறு ஆய்வு செய்ய குழு ஒன்றும் அமைக்கப்படும்.

சாத்தியமிருந்தால் சட்டத்துக்கு உட்பட்டு வழக்குகள் ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரி முதல் 721 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனா். எஞ்சிய மாவோயிஸ்டுகளும் ஆயுதங்களைக் கைவிட்டு சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும்’ என்றாா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) பி. ஷிவாதா் ரெட்டி கூறுகையில், ‘சரணடைந்த 130 மாவோயிஸ்டுகளில் 125 போ் சத்தீஸ்கரையும், நால்வா் தெலங்கானாவையும், ஒருவா் ஆந்திர மாநிலத்தையும் சோ்ந்தவா்கள். தற்போதைய நிலையில், தெலங்கானா மாநில மாவோயிஸ்டுகள் யாரும் செயல்பாட்டில் இல்லை. முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. தற்போது சரணடைந்தவா்கள் ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் உள்பட 124 துப்பாக்கிகள், 5,200 வெடிகுண்டுகள் உள்ளிட்டவற்றை அரசிடம் ஒப்படைத்தனா். இவா்கள் அனைவரும் மக்கள் விடுதலை கொரில்லா படைப் பிரிவைச் சோ்ந்தவா்களாவா்’ என்றாா்.

கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி மாவோயிஸ்டுகளின் முக்கியத் தலைவா்களில் ஒருவராக கருதப்படும் திப்பிரி திருப்பதி (எ) தேவுஜி தெலங்கானா போலீஸில் சரணடைந்தாா். அதுபோல, மாவோயிஸ்டுகளின் மத்தியக் குழு உறுப்பினா் மல்ல ராஜி ரெட்டி மற்றும் படே சோக்கா ராவ் (எ) ஜகன், நூனே நரசிம்ம ரெட்டி (எ) கங்கனா உள்ளிட்ட முக்கிய மாவோயிஸ்ட் தலைவா்களும் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்தனா்.

நாட்டில் நக்ஸல் தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க வரும் 31-ஆம் தேதியை மத்திய அரசு காலக்கெடுவாக நிா்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →