மணிப்பூர் பிரச்னைக்குத் தீர்வு காண பிரதமர் மோடி நேரடி நடவடிக்கை: மத்திய அமைச்சர்
மணிப்பூர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் முயற்சியில் பிரதமர் மோடி..
மணிப்பூர் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கண்டறிவதில் பிரதமர் நரேந்திர மோடி நேரடி அணுகுமுறையைக் கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
மாநாடு ஒன்றில் பேசிய ரிஜிஜு, இரு சமூகங்களுக்கு இடையிலான இன வன்முறையின் விளைவாக ஏற்பட்டுள்ள பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் அரசு கவனம் செலுத்தும் அணுகுமுறையைக் கொண்டிருப்பதால் மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்பும் என்று நம்புவதாகக் கூறினார்.
பிரதமர் மோடி பிரச்னை இருக்கும் இடத்திற்குச் செல்வதன் அர்த்தம் என்ன? பிரதமர் அந்த பிரச்னையை அறிந்துகொள்ள வேண்டும். அறிக்கை வெளியிட வேண்டும். ஆனால் மணிப்பூர் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைக்கு நிரந்தரமாகத் தீர்வு காணப்பட்டு, முழுவதுமாகத் தீர்க்கப்படும் என்பதை உறுதிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஒரே பிரதமர் இவர்தான்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சரின் நேரடி அணுகுமுறையால், மணிப்பூர் பிரச்னையை தீர்ப்பதில் சமமாகக் கவனம் செலுத்து வருகின்றனர். மேலும் அமித் ஷா மணிப்பூரில் 4 நாள்கள் தங்கியிருந்து அமைதியை நிலைநாட்டுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகு, ஆயுதங்கள் வைத்திருக்கும் மக்கள் ஒப்படைக்கவேண்டும் என்று ஆளுநர் வேண்டுகோளுக்கிணங்க, ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டன என்ற நல்ல செய்தியும் கேட்க முடிகிறது.
கடந்த பத்தாண்டுகளில் வடகிழக்கில் பாஜக செழித்து வளர காரணம், பிரதமர் நரேந்திர மோடி மக்களின் எதிர்காலத்திற்காகச் செய்தவை அனைவரையும் ஈர்ப்பதே காரணம். காங்கிரஸை கடுமையாகச் சாடிய அவர், கடந்த 65 ஆண்டுகளில் செய்ய முடியாததை பாஜக 10 ஆண்டுகளில் செய்துள்ளது என்றும் அவர் கூறினார்.