வாழ்வாதாரத்திற்காக முடிந்தவரை பல மொழிகளைக் கற்பது மிகவும் அவசியமானது என்றும் மொழி என்பது வெறுப்பதற்காக அல்ல எனவும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஹிந்தி மொழி கற்பதற்கு ஆதரவாக அம்மாநில துணை முதல்வரும் ஜனசேனா கட்சியின் தாலிவருமான பவன் கல்யாண் கருத்து தெரிவித்திருந்த நிலையில், தற்போது சந்திரபாபு நாயுடுவும் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தும், மும்மொழி கற்பதன் அவசியத்தை வலியுறுத்தியும் சட்டப்பேரவையில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது,
''இதனை மிகவும் தெளிவுடன் கூறுகிறேன். மொழி என்பது வெறுப்பதற்காக அல்ல. இங்கு (ஆந்திரம்) தாய் மொழி என்பது தெலுங்கு. ஹிந்தி என்பது நம் தேசிய மொழி. ஆங்கிலம் சர்வதேச மொழி.
வாழ்வாதாரத்துக்காக தாய் மொழியை மறக்காமல், மற்ற எந்தவொரு மொழியையும் கற்றுக்கொள்ளலாம். ஹிந்தி கற்பதால் தில்லியில் சரளமாக நமது கருத்துகளை முன்வைத்து பேச முடியும்.
பல்வேறுதரப்பட்ட மக்கள் சீனா, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்கின்றனர். அங்கு வாழ்வாதாரத்துக்காக அந்த நாட்டு மொழியைக் கற்றுக்கொள்கின்றனர்.
ஆங்கில மொழியால் மட்டுமே அறிவுக்கு உத்தரவாதம் கொடுக்க முடியும் என்ற தவறான கருத்து நிலவுகிறது. மொழி என்பது மற்றவர்களுடன் பேசுவதற்காக மட்டுமே.
மொழியை கற்றுக்கொள்வது அறிவை தீர்மானிக்காது. தாய் மொழியில் படிப்பவர்கள் மட்டுமே உலகம் முழுவதும் சிறந்து விளங்குகின்றனர். தாய் மொழி வாயிலாக கற்பது மிகவும் எளிதானது'' எனக் குறிப்பிட்டார்.
சர்ச்சையில் முடிந்த பவன் கல்யாண் பேச்சு
''வணிக ரீதியாக பலனடைய வேண்டி தமிழ் திரைப்படங்களை ஹிந்தியில் மொழி பெயர்ப்பு செய்யும்போது, ஹிந்தியை எதிர்ப்பது ஏன்?'' என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கேள்வியெழுப்பியிருந்தார்.
''பணியாற்ற மட்டும் பிகாரிலிருந்து ஆள் வரவேண்டும் ஆனால் ஹிந்தியை வேண்டாம் என்றால் எப்படி? இதெல்லாம் மாறவேண்டுமல்லவா? மொழிகளில் மீது ஏன் வெறுப்பு காட்ட வேண்டும்'' எனப் பேசியிருந்தார்.
பவன் கல்யாணின் இந்தப் பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சியினர் பலர் எதிர்ப்பு தெரிவித்து பதில் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | நாட்டின் ஏற்றுமதியில் மீண்டும் சரிவு! ரூ. 12 ஆயிரம் கோடி இழப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.