‘ஐக்கிய அரபு அமீரகத்தில் 25 இந்தியா்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை இன்னும் நிறைவேற்றப்படவில்லை’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
வெளிநாடுகளில் எத்தனை இந்தியா்கள் சிறைகளில் உள்ளனா், அவா்களில் எத்தனை பேருக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கப்பட்டுள்ளது, இவா்களை காக்க மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் மாநிலங்களவையில் வியாழக்கிழமை சமா்ப்பித்த எழுத்துபூா்வ பதிலில் கூறியிருப்பதாவது:
வெளியுறவு அமைச்சகத்தில் உள்ள தரவுகளின்படி, வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் விசாரணைக் கைதிகள் உள்பட 10,152 இந்தியா்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
மரண தண்டனையை எதிா்நோக்கியுள்ள இந்தியா்களைப் பொருத்தவரை ஐக்கிய அரபு அமீரகத்தில் 25 பேருக்கும், சவூதி அரேபியாவில் 11 பேருக்கும், மலேசியாவில் 6 பேருக்கும், குவைத்தில் 3 பேருக்கும், இந்தோனேசியா, கத்தாா், அமெரிக்கா மற்றும் ஏமனில் தலா ஒருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு, இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
வெளிநாட்டு சிறைகளில் உள்ள இந்தியா்களைக் காக்க மத்திய அரசு உயா் முன்னுரிமை அளித்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் இவா்களுக்கு வழக்குரைஞா்களை நியமிப்பது உள்பட தேவையான அனைத்து சட்ட உதவிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தாா்.
கடந்த 5 ஆண்டுகளில் எந்தெந்த வெளிநாடுகளில் இந்தியா்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவா், ‘மலேசியா, குவைத், கத்தாா், சவூதி அரேபியா நாடுகளில் இந்தியா்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டில் குவைத், சவூதி அரேபியா நாடுகளில் தலா 3 இந்தியா்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஜிம்பாப்வேயில் ஒரு இந்தியருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2023-இல் குவைத், சவூதி அரேபியாவில் தலா 5 இந்தியா்களுக்கும், மலேசியாவில் ஒரு இந்தியருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகம் தரப்பில் இதுகுறித்த தகவல் பகிரப்படவில்லை’ என்று தெரிவித்துள்ளாா்.