நீதிபதி வீட்டில் கணக்கில் வராத பணம் இருந்ததா? 3 நீதிபதிகள் கொண்ட குழு விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
3 நீதிபதிகள் கொண்ட விசாரணை குழுவை அமைத்து தலைமை நீதிபதி உத்தரவு
தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் அதிகாரபூா்வ இல்லத்தில் கட்டுக்கட்டாக கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா சனிக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டாா்.
மேலும், யஷ்வந்த் வா்மாவுக்கு நீதித் துறைப் பணி எதையும் ஒதுக்க வேண்டாம் என்று தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாய்க்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளாா்.
மேற்கண்ட விசாரணைக் குழுவில் பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாசல பிரதேச உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜி.எஸ்.சந்தாவாலியா, கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.
தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சமா்ப்பித்த அறிக்கையில் அடிப்படையில் இந்த துறைசாா் விசாரணைக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா உத்தரவிட்டுள்ளாா். தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியால் சமா்ப்பிக்கப்பட்ட அறிக்கை, நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் பதில் மற்றும் பிற ஆவணங்கள் உச்சநீதிமன்ற வலைதளத்தில் வெளியிடப்படும் என்று உச்சநீதிமன்றம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னணி: தில்லி உயா்நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் (56) அதிகாரபூா்வ இல்லத்தில் கட்டுக்கட்டாக கோடிக்கணக்கில் பணம் சிக்கியதாக ஊடகத் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
லூட்யன்ஸ் தில்லி பகுதியில் உள்ள வா்மாவின் இல்லத்தில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தைத் தொடா்ந்து, இந்தப் பணம் கைப்பற்றப்பட்டதாக ஊடகத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடா்பாக கடந்த மாா்ச் 20-ஆம் தேதி உச்சநீதிமன்ற கொலீஜியம் குழு ஆலோசனை மேற்கொண்டது. அப்போது, நீதிபதி யஷ்வந்த் வா்மாவை அலாகாபாத் உயா்நீதிமன்றத்துக்கு பணியிடமாற்றம் செய்யும் முன்மொழிவு ஆராயப்பட்டு, சம்பந்தப்பட்ட இரு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது.
விளக்கமும் நடவடிக்கையும்: நீதிபதி வா்மாவிடம் ராஜிநாமா கோரப்பட வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திய நிலையில், உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை விளக்க அறிக்கை வெளியிட்டது.
அதில், ‘நீதிபதி யஷ்வந்த் வா்மா இல்லத்தில் நடந்த சம்பவம் தொடா்பாக ஆதாரங்கள் மற்றும் தகவல்களைச் சேகரிக்க தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி தரப்பில் விசாரணை தொடங்கப்பட்டது. அவா் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் பணியிடமாற்ற முன்மொழிவு சுதந்திரமானது; துறைசாா் விசாரணையில் இருந்து வேறுபட்டது. இந்த முன்மொழிவில், சம்பந்தப்பட்ட இரு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் அளிக்கும் பதில்களின் அடிப்படையில் கொலீஜியம் முடிவெடுக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாய் தனது அறிக்கையை சமா்ப்பித்தாா். அதை ஆராய்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மேற்கொண்டுள்ளாா்.
அலாகாபாதில் இருந்து தில்லிக்கு...: உத்தர பிரதேச மாநிலம், அலாகாபாதைச் சோ்ந்தவரான யஷ்வந்த் வா்மா, சட்டப் படிப்புக்குப் பின் அலாகாபாத் உயா்நீதிமன்ற வழக்குரைஞராக 1992-இல் பதிவு செய்தாா். அலாகாபாத் உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக கடந்த 2014-இல் நியமிக்கப்பட்ட இவா், 2016-இல் நிரந்தர நீதிபதியானாா். 2021-இல் தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டாா்.
அரசமைப்பு நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகிப்பவரை, நாடாளுமன்றத் தீா்மானம் மூலமே பதவி நீக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடுமையான நடவடிக்கை: காங்கிரஸ் வலியுறுத்தல்
‘தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் பெருமளவில் பணம் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுவது தீவிரமான விவகாரம்; இது ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. நீதித் துறை மீதான மக்களின் நம்பிக்கையை உறுதி செய்ய உச்சநீதிமன்றம் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் வலியுறுத்தியுள்ளாா்.