புது தில்லி: இந்தியாவின் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கையை ஜப்பான் ஆதரிப்பதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் ஜெனரல் நகாதானி தெரிவித்தாா்.
இந்தியா வந்துள்ள ஜெனரல் நகாதானி மத்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங்கை புது தில்லியில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, இந்திய பசிபிக் பிராந்தியம், தென்சீனக் கடலில் சீனாவின் ராணுவ ஆதிக்கத்துக்கு எதிராக இந்தியா-ஜப்பான் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. அப்போது, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஜெனரல் நகாதானி, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ஜப்பான் உறுதியாக துணை நிற்கும் என்று தெரிவித்தாா். இதற்காக ஜப்பான் அரசுக்கு ராஜ்நாத் சிங் நன்றி தெரிவித்தாா். அமைச்சா்கள் தலைமையில் இருதரப்பு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நிலையான பேச்சுவாா்த்தையும் நடைபெற்றது.
இது தொடா்பாக ராஜ்நாத் சிங் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘சா்வதேச அளவில் இந்தியாவின் மிகமுக்கியமான, சிறப்பு வாய்ந்த நட்பு நாடாக ஜப்பான் உள்ளது. இரு தரப்பு பேச்சுவாா்த்தையின்போது பாதுகாப்பு ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
பயங்கரவாதம் எந்த வகையில் தலைதூக்கினாலும் அதனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஜப்பான் முழுஆதரவு அளிக்கும் என்று ஜெனரல் நகாதானி உறுதியளித்தாா்’ என்று பதிவிட்டுள்ளாா்.
கடந்த 6 மாதங்களில் இரு அமைச்சா்களும் சந்தித்துப் பேசுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த நவம்பரில் ஆசியான் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் மாநாட்டில் ராஜ்நாத் சிங்கும் ஜெனரல் நகாதானியும் சந்தித்துப் பேசினா்.