பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் 
இந்தியா

பஞ்சாப் கள்ளச்சாராய விவகாரம்: 21 பேர் பலி! ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!

பஞ்சாப் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது...

DIN

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

அமிர்தசரஸ் மாவட்டத்தின் மஜிதா பகுதியில் நேற்று (மே 12) விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தைக் குடித்து உடல் பாதிக்கப்பட்டு சுமார் 17 பேர் பலியானதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 21 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் பங்கலி, படால்புரி, மராரி கலான், தெரேவால் மற்றும் தல்வாண்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் எனவும் சிகிச்சை பெற்று வருவோரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் கள்ளச்சாராயம் தயாரித்த முக்கிய குற்றவாளி மற்றும் அவரது கூட்டாளிகள் என 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அப்பகுதியின் காவல் துறை உயர் அதிகாரிகள் உள்பட 4 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இழப்பீடு அறிவிப்பு!

இந்த விவகாரம் மிகப் பெரியளவில் கவனம் ஈர்த்துள்ள நிலையில் பல்வேறு எதிர்க்கட்சிகள் அம்மாநில முதல்வர் பகவந்த் மான்-ன் அரசுதான் இதற்கு காரணம் எனக் குற்றம்சாட்டின.

இந்நிலையில், மராரி கலான் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் குடும்பத்தினரை இன்று (மே 13) பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும், பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனக் கூறியதுடன், அவர்களது குழந்தைகளின் கல்விக்கான செலவை அரசே ஏற்கும் என உறுதியளித்துள்ளார்.

இத்துடன், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு வேலை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியத் தேவைகளுக்கும் அரசு உதவி செய்யும் எனக் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவத்துக்கு காரணமான அனைத்து குற்றவாளிகளுக்கும் உரிய தண்டனை வழங்கப்படும் எனவும் கள்ளச்சாராயம் விற்கும் யாரும் மாநில அரசின் நடவடிக்கையிலிருந்து தப்ப முடியாது எனவும் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

இவை அனைத்தும் விபத்தினால் ஏற்பட்ட மரணங்கள் அல்ல. சிலரது பேராசைகளினால் நிகழ்ந்த கொலைகள். இதற்கு காரணமான யாரும் அவர்களுக்கு வழங்கப்போகும் தண்டனைகளிலிருந்து தப்பிக்க மாநில அரசு ஒருபோதும் அனுமதிக்காது என உறுதிபடக் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவத்துக்கு காரணமான கள்ளச்சாராயத்தைத் தயாரிக்க இணையத்தில் சுமார் 600 லிட்டர் மெத்தனால் எனும் ரசாயனப் பொருளை வாங்கியுள்ளார்கள் எனக் கூறிய அவர், இதுபோன்ற குற்றங்கள் சக்திவாய்ந்த அரசியல்வாதிகளின் துணையின்றி அரங்கேற முடியாது; எனவே, காவல் துறையினர் அந்தக்கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சில ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாப்பின் தார்ன் தரான், அமிர்தசரஸ் மற்றும் குருதாஸ்பூர் ஆகிய மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 130-க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் ஏராளமானோர் தங்களது கண்பார்வையை இழந்ததாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பாகிஸ்தான் தூதரக அதிகாரி 24 மணிநேரத்திற்குள் வெளியேற உத்தரவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

' அறிவியல் சார்ந்து முற்போக்கு சிந்தனையுடன் கல்வித் துறையை நடத்தி வருகிறோம் '

ஹோட்டலுக்குள் நுழைந்து சுற்றிப்பார்த்த காட்டு யானைகள்!

சென்னை புறநகர் ரயில் சேவை பாதிப்பு!

வனத்துறையினரின் வாகனத்தை ஆவேசமாக தாக்கிய காட்டு யானை! பதைபதைக்கும் விடியோ!

காலை உணவுத் திட்டத்தால் என்ன பயன்? ஆய்வு முடிவுகள் வெளியீடு!

SCROLL FOR NEXT