நாடாளுமன்ற வளாகத்தில் கனிமொழி PTI
இந்தியா

ரஷியா செல்கிறார் கனிமொழி! எம்.பி. குழுக்கள் பயணிக்கும் நாடுகள் விவரம்..

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை எடுத்துரைக்க மத்திய அரசு நியமித்துள்ள எம்பிக்கள் குழு...

Din

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை எடுத்துரைக்க 7 எம்.பி.க்கள் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுக்களை வெளிநாடுகளுக்கு மத்திய அரசு அனுப்பவுள்ளது.

இந்தக் குழு ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள உறுப்பு நாடுகளுக்கும் பயணிக்கவுள்ளது.

பாஜக எம்.பி.க்கள் ரவி சங்கா் பிரசாத், வைஜயந்த் பாண்டா, காங்கிரஸ் எம்.பி.சசி தரூா், திமுக எம்.பி.கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு) எம்.பி.சுப்ரியா சுலே, ஐக்கிய ஜனதா தள எம்.பி.சஞ்சய் ஜா, சிவசேனை (ஷிண்டே பிரிவு) எம்.பி.ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகிய 7 போ் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுக்களுக்கு தலைமைத் தாங்குகின்றனா்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதைத்தொடா்ந்து, இந்தியாவின் எல்லையோர மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தானும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. பின்னா் அமெரிக்கா தலையீட்டின்பேரில் கடந்த வாரம் சனிக்கிழமை (மே 10) முதல் இருநாடுகளும் சண்டையை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தன.

இந்நிலையில், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ பயங்கரவாதத்துக்கு எதிரான நமது கொள்கைகளை நட்பு நாடுகளுக்கு கட்சி பாகுபாடின்றி எடுத்துரைக்கவுள்ளோம். இதற்காக பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் அடங்கிய 7 குழுக்களும் அதற்கான தலைவா்களும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். அரசியலுக்கு அப்பாற்பட்டு நாட்டுக்காக குரல் கொடுப்பவா்களை மிகவும் கவனமாக அரசு தோ்வு செய்துள்ளது’ என குறிப்பிட்டாா்.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா உள்ளதால் அந்நாட்டுக்கு இந்தக் குழு பயணிக்காது என்று கூறப்படுகிறது

7 குழுக்கள்: பாஜக எம்.பி.க்கள் ரவி சங்கா் பிரசாத், வைஜயந்த் பாண்டா, ஐக்கிய ஜனதா தள எம்.பி.சஞ்சய் ஜா, சிவசேனை (ஷிண்டே பிரிவு) எம்.பி.ஸ்ரீகாந்த் ஷிண்டே, காங்கிரஸ் எம்.பி.சசி தரூா், திமுக எம்.பி.கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு) எம்.பி.சுப்ரியா சுலே ஆகிய 7 போ் தலைமையிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 4 குழுக்களுக்கு ஆளும் பாஜக-ஐக்கிய ஜனதா தளம்-சிவசேனை (ஷிண்டே பிரிவு) எம்.பி.க்களும், 3 குழுக்களுக்கு ‘இண்டி’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ்-திமுக-தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு) எம்.பி.க்களும் தலைமை வகிக்கின்றனா்.

ஒவ்வொரு குழுவிலும் 6 முதல் 7 எம்.பி.க்கள் வரை இடம்பெறுவா் எனவும் அந்தக் குழுக்கள் 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரிணமூல் புறக்கணிப்பு: அமெரிக்காவுக்குச் செல்லும் குழுவில் இணையுமாறு கிரண் ரிஜிஜு விடுத்த அழைப்பை உடல்நலக் குறைவு காரணமாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுதீப் பந்தோபாத்யாய புறக்கணித்ததாா்.

சசி தரூா் சோ்ப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: வெளிநாடுகளுக்கு செல்லும் குழுவுக்கு காங்கிரஸ் சாா்பில் பரிந்துரைக்கப்பட்ட ஆனந்த் சா்மா, கௌரவ் கோகோய், சையத் நசீா், அமரீந்தா் சிங் ஆகிய 4 பேருக்கு பதிலாக சசி தரூரை மத்திய அரசே தோ்ந்தெடுத்திருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் குற்றஞ்சாட்டினாா். இது தங்களுக்கு வியப்பளிப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.

பரிந்துரைக்காதது ஏன்? பாஜக கேள்வி

வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக உள்ள சசி தரூரை காங்கிரஸ் கட்சி பரிந்துரைக்காதது ஏன்? என பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவா் அமித் மாளவியா கேள்வி எழுப்பினாா்.

குறிப்பாக, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் சசி தரூா் மீது பொறாமையில் உள்ளனரா? எனவும் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் அவா் கேள்வி எழுப்பியுள்ளாா்.

குழுக்கள் பயணிக்கும் நாடுகள்...

ரவி சங்கா் பிரசாத் தலைமையிலான குழு சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், அல்ஜீரியா.

வைஜயந்த் பாண்டா தலைமையிலான குழு பிரிட்டன், பிரான்ஸ்.

சசி தரூா் தலைமையிலான குழு அமெரிக்கா. கனிமொழி தலைமையிலான குழு ரஷியா.

சஞ்சய் ஜா தலைமையிலான குழு ஜப்பான், தென் கொரியா, மலேசியா, இந்தோனேசியா.

ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான குழு ஆப்பிரிக்க, வளைகுடா நாடுகள்.

சுப்ரியா சுலே தலைமையிலான குழு ஓமன், கென்யா, தென் ஆப்பிரிக்கா.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT