பாகிஸ்தான் தாக்குதலில் பலியான முகமது அக்ரமின் மனைவி ஃபரிதா. ENS
இந்தியா

மறுபக்கம்! பாகிஸ்தான் தாக்குதலில் தந்தையை இழந்து தவிக்கும் 6 குழந்தைகள்!

பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் குடும்பத் தலைவரை இழந்து வாடும் மனைவி, குழந்தைகள் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 6 குழந்தைகளின் தந்தையான சௌத்ரி முகமது அக்ரம் பலியானது அந்த குடும்பத்தையே நிலைகுலையச் செய்துள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம், பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டது. தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவமும் வடக்கு காஷ்மீரில் உள்ள உரி முதல் ஜம்முவில் உள்ள பூஞ்ச், ரஜோரி வரை கடுமையான தாக்குதல் நடத்தியது. இதனால் இந்தியாவில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், 50 பேர் வரையில் உயிரிழந்திருக்கலாம் என்று பாகிஸ்தான் தரப்பு கூறியுள்ளது.

கடந்த மே 7 ஆம் தேதி பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இந்த நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களில் சுக் கட்டா பகுதியில் வசித்த வந்த முகமது அக்ரம் என்பவரும் ஒருவர். 50 வயதான முகமது அக்ரம் தனது மனைவி மற்றும் 6 குழந்தைகளுடன் அங்கு வசித்து வந்தார்.

இதுபற்றி அவரது மனைவி ஃபரிதா பி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், 'மே 7 அன்று பாகிஸ்தான் ஷெல் தாக்குதலின்போது பலத்த சத்தங்களைக் கேட்டோம். நான், கணவர் மற்றும் எங்கள் 6 குழந்தைகள் இருந்தோம். அந்த சத்தங்களைக் கேட்டு பயந்துபோனோம்.

அப்போது வீட்டின் வாசலைப் பூட்டுவதற்காக அக்ரம் வெளியே சென்றபோது வாசலில் ஒரு குண்டு விழுந்தில் அக்ரம் படுகாயம் அடைந்தார். மூத்த மகள் அஃப்ரீனும் காயமடைந்த நிலையில் பூஞ்சில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்ட நிலையில் அக்ரம் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மகளுக்கு லேசான காயம் என்பதால் சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவளுக்கு தலை, முகம், வாயில் காயங்கள் ஏற்பட்டுள்ளன" என்றார்.

இந்த குடும்பத்திற்கு முகமது அக்ரமின் வருமானம் மட்டுமே இருந்ததால் அவரது குடும்பம் தற்போது நிலைகுலைந்து போயிருக்கிறது. கூலித் தொழிலாளியான அக்ரம் கான்க்ரீட் வேலை செய்து வந்தார்.

கணவரின் அன்றாட வருமானத்தில் வாழ்ந்து வந்த நாங்கள் தற்போது என்ன செய்வது எனத் தெரியாமல் இருக்கிறோம் என மனைவி ஃபரிதா கூறினார்.

அக்ரமின் மூத்த மகளுக்கு கடந்த 20 நாள்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்து திருமணத்திற்கு தயாராகிக்கொண்டு இருந்தனர்.

அக்ரம் - ஃபரிதாவுக்கு நான்கு மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகள் 12 ஆம் வகுப்பு முடித்துள்ள நிலையில் மற்ற குழந்தைகள் படித்து வருகின்றனர். கடைசி மகள் 2 ஆம் வகுப்பு படிக்கிறார்.

தற்போது குடும்பம் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வருவதால் அக்ரமின் மனைவி ஃபரிதாவுக்கு அரசு வேலை வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று

அக்ரமின் சகோதரர் முகமது பஷீர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அக்ரம் தன்னுடைய குழந்தைகளுக்கு சிறப்பான கல்வியை வழங்க மிகவும் ஆர்வமாக இருந்ததாக பஷீர் தெரிவித்தார். எனவே குழந்தைகளை படிக்கவைக்கும் பொறுப்பை அரசு ஏற்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

குடும்பத் தலைவர் இறந்ததால் மனைவியும் 6 குழந்தைகளும் செய்வதறியாவது தவிப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி

ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

பேச்சு தோல்வி: 6-ஆவது நாளாக நீடித்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவு ரத்து

வால்பாறையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT