ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது, பொற்கோயிலுக்குள் வான் பாதுகாப்பு துப்பாக்கிகள் கொண்டு செல்லப்பட்டதாக வெளியான செய்தியை இந்திய ராணுவம் மறுத்துள்ளது.
அதேபோல், பொற்கோயிலின் கூடுதல் தலைமை பூசாரி மற்றும் சீக்கியர்களின் மத அமைப்பான சிரோமணி குருத்வாரா நிர்வாகக் குழுவும் கோயிலுக்குள் ராணுவத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.
அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலை குறிவைத்து கடந்த மே 8 ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவத்தினர் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகவும், இதனை வான் பாதுகாப்பு துப்பாக்கிகள் கொண்டு வெற்றிகரமாக வானிலேயே அழித்ததாகவும் இந்திய ராணுவம் விளக்கம் அளித்திருந்தது.
இதனிடையே, ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வான் பாதுகாப்பு துப்பாக்கிகளை கோயில் வளாகத்துக்குள் நிலைநிறுத்த ராணுவத்துக்கு பொற்கோயில் நிர்வாகம் அனுமதி அளித்ததாக செய்திகள் பரவி வருகின்றன.
இந்த செய்தியை மறுத்துள்ள இந்திய ராணுவம், ”பொற்கோயிலில் வான் பாதுகாப்பு துப்பாக்கிகள் கொண்டு செல்லப்பட்டதாக சில ஊடகங்களில் செய்தி வருகின்றன. கோயில் வளாகத்துக்குள் அத்தகைய துப்பாக்கிகள் எதுவும் பயன்படுத்தவில்லை என்பதை தெளிவுபடுத்தப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.
சிரோமணி குருத்வாரா நிர்வாகக் குழு தலைவர் ஹர்ஜிந்தர் சிங் தாமி கூறுகையில், ”இரு நாடுகளுக்கு இடையே மோதலின்போது மின் விளக்குகள் அணைப்பது தொடர்பாக மட்டுமே எங்களிடம் தொடர்புகொண்டு பேசினார்கள். வான் பாதுகாப்பு துப்பாக்கிகள் நிலைநிறுத்துவது தொடர்பாக எந்த ராணுவ அதிகாரியும் தொடர்புகொள்ளவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவத்தின் போது வெளிநாட்டு பயணத்தில் இருந்ததாகவும், இதுதொடர்பாக யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் கோயிலின் தலைமை பூசாரி கியானி ரக்பீர் சிங் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் சம்பவத்தின்போது கோயிலின் நிர்வாகத்தை கவனித்த கூடுதல் தலைமை பூசாரியும், பரவும் செய்திகளை மறுத்துள்ளார்.
அதேபோல், இதுதொடர்பாக அரசுத் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பொற்கோயில் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.