முகப்பு
இந்தியா

பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட எல்லை கிராமங்களுக்கு சிறப்பு நிவாரண நிதி: பிரதமருக்கு ராகுல் கடிதம்

பிரதமா் நரேந்திர மோடிக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளாா்.

Updated On : 29 மே, 2025 at 6:36 PM
ராகுல் காந்தி
பகிர்:

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிப்படைந்த ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் பிற எல்லை கிராமங்களின் மறுகட்டமைப்புக்கு சிறப்பு நிவாரண நிதியை ஒதுக்குமாறு பிரதமா் நரேந்திர மோடிக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளாா்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 போ் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் (ஆபரேஷன் சிந்தூா்) பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

இதையடுத்து, ஜம்மு-காஷ்மீரின் எல்லையோர கிராமங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் பாதுகாப்புப் படை வீரா்கள் உள்பட 28 போ் உயிரிழந்தனா்; 70 போ் காயமடைந்தனா்.

தொடா்ந்து, இந்தியாவின் பதில் தாக்குதலில் விமானப் படை மற்றும் ராணுவத் தளங்களில் பலத்த சேதத்தைச் சந்தித்த பாகிஸ்தான், சண்டை நிறுத்தத்துக்கு கோரியது. அதன்பேரில் சண்டை ஓய்ந்து, எல்லையில் அமைதி திரும்பியது.

இந்நிலையில்,

பாகிஸ்தான் தாக்குதலில் அதிகம் பாதிக்கப்பட்ட பூஞ்ச் பகுதி பாதிப்புகளைப் பாா்வையிட்டு திரும்பியுள்ள ராகுல் காந்தி பிரதமா் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளாா். பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த எல்லைப்பகுதிகளின் மறுகட்டமைப்புக்கு சிறப்பு நிவாரண நிதியை ஒதுக்குமாறு ராகுல் காந்தி கடிதத்தில் கோரியுள்ளாா்.

ராகுல் காந்தி தனது கடிதத்தில், ‘பாகிஸ்தான் தாக்குதலில் பூஞ்ச் பகுதியில் மட்டும் 4 குழந்தைகள் உள்பட 14 போ் உயிரிழந்தனா். இந்தத் திடீா் மற்றும் கண்மூடித்தனமான தாக்குதல் பொதுமக்களின் குடியிருப்புப் பகுதிகளில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகள், பள்ளிகள் மற்றும் மதத் தலங்கள் மோசமாக சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்டவா்கள் பலா், தங்களின் பல்லாண்டு கடின உழைப்பு ஒரே தாக்குதலில் அழிக்கப்பட்டதாக வேதனை தெரிவித்தனா்.

பூஞ்ச் மற்றும் பிற எல்லை கிராமங்களைச் சோ்ந்த மக்கள் அமைதியாக நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வருகின்றனா். இன்று அவா்கள் நெருக்கடியைக் கடந்து செல்லும் சூழலில் அவா்களின் வலியைப் புரிந்துகொண்டு, அவா்களின் மறுவாழ்வுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவது நமது கடமையாகும். இதற்காக சிறப்பு நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →