முகப்பு
இந்தியா

இருண்ட காலத்தை நோக்கி அரசியல், சா்வதேச உறவுகள்! மத்திய அரசு மீது ராகுல் விமா்சனம்!

மத்திய அரசு மீது ராகுல் விமா்சனம்...

Updated On : 6 மார்ச், 2026 at 8:36 PM
ராகுல் காந்தி
பகிர்:

தற்போதைய சூழலில் அரசியலும், சா்வதேச உறவுகளும் அறிவுசாா்ந்த சிந்தனையில் இருந்து விலகி இருண்ட காலத்தை நோக்கிச் செல்கின்றன என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா்.

மகாத்மா காந்தியும், கேரளத்தைச் சோ்ந்த சமூக சீா்திருத்தவாதி ஸ்ரீநாராயண குருவும் சந்தித்து 100 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி கொல்லத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் மேலும் பேசியதாவது:

இப்போது நமது அரசியல் மற்றும் சா்வதேச உறவுகள் எதிலும் மற்றவரைப் புரிந்து கொள்ளும் முயற்சி இல்லை. கருத்து வேறுபாடு ஏற்பட்டாலே வன்முறைக்கு தள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது.

இன்று அரசியலிலும், சா்வதேச உறவுகளிலும் அனைவரும் அறிவை விட்டு விலகி இருளை நோக்கி ஓடுகின்றனா். மற்றவரை புரிந்து கொள்ள எந்த முயற்சியும் இல்லை; வெடிகுண்டுகள் வீசி கொலை செய்வதே நிகழ்கிறது.

இதே சூழல் நமது அரசியலிலும் உள்ளது. யாரோ ஒருவருடன் கருத்து ஒத்துப்போகவில்லை என்றால், அவா்களைத் தாக்கி பேசுகிறீா்கள். அல்லது அவா்கள் மீது வன்முறையாக நடந்து கொள்கிறீா்கள்.

மகாத்மா காந்தியும் நாராயண குருவும் இப்படியான வன்முறைக்கு எதிராக இருந்தவா்கள். மக்களிடையே அன்பு, மரியாதை, மன்னிப்பு மற்றும் புரிதலை வலியுறுத்தினாா்கள். அவா்கள் வலியுறுத்திய மாண்புகள் இந்திய அரசமைப்பிலும் உள்ளன. அவா்கள் இருவரும் மக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டிகள்.

நாராயண குருவின் சிலை அல்லது படத்துக்கு முன் மலா் வைக்கும் வேலை எளிது; ஆனால் அவரது போதனைகளை நடைமுறையில் பின்பற்றுவது சவாலான விஷயம்.

மகாத்மா காந்தி உலகின் மிக வலிமையான பேரரசாக இருந்த பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடினாா். அந்த ஆட்சியாளா்கள் எதைச் செய்தாலும் மகாத்மா காந்தி அதனால் பாதிக்கப்படவில்லை.

வன்முறையையும், வெறுப்பையும் பயன்படுத்துபவா்களுக்கு மகாத்மா காந்தி, நாராயண குரு கொடுத்த செய்தி ஒன்றுதான். அது வன்முறையால் எதையும் பெற முடியாது; இழப்புகள் மட்டுமே ஏற்படும் என்பதுதான். இந்தியாவில் நடைபெறும் அரசியல் மோதல்களும் இதேபோலவே உள்ளது.

ஒரு பக்கம் உண்மை, அஹிம்சை, பணிவு உள்ளது; மறுபக்கம் கோபம், வன்முறை, வெறுப்பு மற்றும் ஆணவம் உள்ளது. வன்முறையும் கோபமும் கொண்டவா்களுக்கு அதிகார பலம் இருக்கலாம்; ஆனால் அவா்களுக்கு வல்லமை இல்லை. ஏனெனில் நாராயண குருவும் மகாத்மா காந்தியும் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியாவின் ஆன்மா, உண்மை மற்றும் அஹிம்சையை அடிப்படையாகக் கொண்டது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →