மத்தியப் பிரதேச மாநிலம் சித்ரகூட்டில் ஆன்மிகத் தலைவர் ராமபத்ராச்சாரியாரை, ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர திவேதி, ராணுவ சீருடையில் சென்று பார்த்து ஆசி பெற்றிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
இது தொடர்பான தகவல்களும், புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், ராணுவ சீருடையில், மத ரீதியான சந்திப்புகளை மேற்கொள்வது குறித்து பலரும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
ராணுவ தளபதியை சந்தித்தபோது, அவரிடம், தனக்கு குரு தட்சிணையாக அல்லது காணிக்கையாக என்ன வழங்க முடியும் என்று ஆன்மிகத் தலைவர் ராமபத்ராசார்யா கேட்டதாகவும், மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டு காணிக்கையாகத் தர வேண்டும் என்று தான் விடுத்தக் கோரிக்கையை ராணுவ தளபதி உபேந்திர திவேதி ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க.. என்ன, ஜோதா பாய் - அக்பர் திருமணம் பொய்யா? ராஜஸ்தான் ஆளுநர் பரபரப்புப் பேச்சு!
இது பற்றி ராமபத்ராசார்யா கூறுகையில், இந்திய ராணுவத் தலைமை தளபதி என்னிடம் ஆசி பெற வந்தார். அவர் ராம மந்திரத்தை என்னிடமிருந்து தீட்சையாகப் பெற்றுக்கொண்டார். அந்த மந்திரமானது, ஹனுமன், சீதா தேவியிடமிருந்து பெற்று இலங்கையை வென்ற அதே மந்திரம்," என்று அவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியிருக்கிறார்.
தொடர்ந்து, குருதட்சிணை குறித்து பேசிய அவர், இதுவரை எந்த குருவும் கேட்காத 'தட்சிணை'யை நான் கேட்பேன் என்று அவரிடம் சொன்னேன். 'எனக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வேண்டும், இதுதான் எனக்கு தட்சிணை என்றேன். அவர் என் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் பதிலளித்தார் என ராமபத்ராசார்யா தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 அன்று பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து அடுத்த ஓரிரு வாரங்களில் ராணுவத் தலைமைத் தளபதியின் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இது ஒரு தகவல்!
2024 ஆம் ஆண்டு, ராணுவ சீருடையில் பேட்ஜ்கள் மற்றும் மத சின்னங்களை அணிவதற்கு எதிரான அதிகாரப்பூர்வ விதிகளை ராணுவம் தனது பணியாளர்களிடம் மீண்டும் வலியுறுத்தியிருந்தது.
அண்மையில், சமூக ஊடகப் பதிவுகளில் சில ராணுவ வீரர்கள் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் அணிகலன்களை அணிந்திருக்கும் புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து இந்த விதிகளை ராணுவம் மீண்டும் வலியுறுத்தியிருந்ததாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.
மேலும் ஒரு கூடுதல் தகவலாக..
கடந்த 1971ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், டாக்காவில் பாகிஸ்தான் இராணுவம், சரணடைவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட புகைப்படம், இதுவரை இந்திய ராணுவத் தலைமை தளபதியின் அலுவலகத்தில் இருந்துள்ளது. ஆனால் அது அண்மையில் அகற்றப்பட்டு, மகாபாராத ஓவியம் மாட்டிவைக்கப்பட்டுள்ளது.
பழைய புகைப்படமானது தவுலா குவானில் உள்ள மானெக்சா மையத்திற்கு மாற்றப்பட்டதாகவும் இராணுவம் விளக்கம் கொடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.