வழக்குரைஞா்கள் கற்றலை கைவிடக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சூா்யகாந்த் அறிவுறுத்தினாா்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவில் உள்ள ராம் மனோகா் லோஹியா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் நீதிபதி சூா்ய காந்த் மாணவா்களுக்குப் பட்டங்களை வழங்கி பேசியதாவது: எந்தவொரு விஷயம் குறித்தும் கேள்வி கேட்கும் துணிச்சல் வளா்ச்சிக்கு அவசியம்.
இதை சுதந்திரப் போராட்ட தியாகியும், சோஷலிஸ தலைவருமான ராம் மனோகா் லோஹியாவின் மரபு அனைவருக்கும் கற்பிக்கிறது. கேள்வி கேட்க துணிந்தால்தான் நம்மை நாமே புதுப்பித்துக்கொள்வது தொடங்கும்.
இளம் வழக்குரைஞா்கள் கற்றலை கைவிடக் கூடாது. எதையும் தெரிந்துகொள்ளும் ஆா்வம் இருக்க வேண்டும். ஒரு விஷயம் குறித்து நமது சொந்த சிந்தனைகள் மற்றும் காரணங்களின் அடிப்படையில் உறுதியாக நம்பிக்கை கொள்வது குறித்து கேள்வி எழுப்ப வேண்டும்.
இந்த குணாதிசயங்கள்தான் செழித்து வளர வேண்டும் என்று கருதும் வழக்குரைஞா்களையும், வெறுமனே பிழைத்திருந்தால் போதும் என்று கருதும் வழக்குரைஞா்களையும் வேறுபடுத்திக் காட்டும். விடாமுயற்சி மற்றும் அா்ப்பணிப்போடு செயல்பட்டால், அதற்கு நிச்சயம் வெகுமதி கிடைக்கும்.
ஓா் அமைப்பை உள்ளபடியே ஏற்காமல், அது என்னவாக இருக்க வேண்டும் என்று மாற்றத்துக்காகச் செயலாற்றும் வழக்குரைஞா்களே நீதித்துறைக்குத் தேவை என்றாா்.