பிகாரில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு மகரசங்கராந்திக்கும் மகளிர் கணக்கில் ரூ.30 ஆயிரம் வரவு வைக்கப்படும் என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறினார்.
பிகாரில் நவம்பர் 6ஆம் தேதி நடைபெறும் முதல்கட்ட தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது. இந்த நிலையில் பிகாரில் அரசியல் தலைவர்கள் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறியதாவது,
ஆட்சியைக் கைப்பற்றினால், மாநிலத்தில் உள்ள அனைத்து முதன்மை விவசாயக் கடன் சங்கங்கள் மற்றும் முதன்மை சந்தைப்படுத்தல் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்களுக்கும் மக்கள் பிரநிதிகள் அந்தஸ்து வழங்கப்படும்.
மாநிலத்தில் 8,400-க்கும் மேற்பட்ட முதன்மை விவசாய கடன் சங்கங்கள் உள்ளன. விவசாயிகளுக்கு நீர்ப்பாசன நோக்கங்களுக்காக இலவச மின்சாரம் வழங்கப்படும். தற்போது விவசாயிகளுக்கு ஒரு யூனிட்டுக்கு 55 பைசா வசூலிக்கப்படுகிறது.
இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை விட போனஸாக ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.300ம், கோதுமைக்கு ரூ.400ம் வழங்கப்படும்.
மை-பஹான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் பெண்களின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ. 2,500 வரவு வைக்கப்படும் என்பதை ஏற்கெனவே உறுதியளித்துள்ளோம்.
அதோடு, வரும் ஜனவரி 14 ஆம் தேதி மகர சங்கராந்தி பண்டிகை மக்களுக்கு ஒரு புதிய ஆண்டு. பெண்களுக்காக அறிவித்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டு மகர சங்கராந்தியன்றும் பெண்களின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.30 ஆயிரம் வரவு வைக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.
243 உறுப்பினர்களைக் கொண்ட பிகார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும், நவம்பர் 14 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.