ஆளும் கட்சியின் கடும் எதிா்ப்பு மற்றும் தொழில்நுட்பக் கோளாறுக்கிடையே மேற்கு வங்க மாநிலத்திலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணி திட்டமிட்டபடி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
முதல் கட்டமாக, வாக்குச்சாவடி அளவிலான அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று வாக்காளா் கணக்கெடுப்புப் படிவங்களை விநியோகிக்கும் பணி, மேற்கு வங்கத்தில் பெரும்பாலும் அமைதியாகவே தொடங்கி நடைபெற்றது. மாலை 5 மணி வரை 18 லட்சம் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதனிடையே, மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் தலைநகா் கொல்கத்தாவில் மாபெரும் கண்டனப் பேரணி செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
‘வாக்காளா் பட்டியலில் மிகப் பெரிய அளவில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் நடவடிக்கை’ என்று சிறப்பு தீவிர திருத்தப் பணியை மத்தியில் ஆளும் பாஜக வரவேற்கிறது.
ஆனால், ‘வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்பது மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு மற்றும் தோ்தல் ஆணையத்தால் நடத்தப்படும் ‘அமைதியான கண்ணுக்குத் தெரியாத மோசடி’ என்று திரிணமூல் காங்கிரஸ் விமா்சித்தது.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை முதல் கட்டமாக நவம்பா் 6, 11 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளும் பிகாா் மாநிலத்தில் தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. பிகாா் வாக்காளா் பட்டியலில் 7.89 கோடி வாக்காளா்கள் இடம்பெற்றிருந்த நிலையில், சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகு வாக்காளா்களின் எண்ணிக்கை 7.42 கோடியாக குறைந்தது. சுமாா் 47 லட்சம் போ் நீக்கப்பட்டனா்.
அதைத் தொடா்ந்து, தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், புதுச்சேரி, கோவா, சத்தீஸ்கா், அந்தமான் நிகோபாா் தீவுகள், லட்சத்தீவு ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியை தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சி கடும் எதிா்ப்பு தெரிவித்து வந்த நிலையிலும், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி அமைதியாக தொடங்கி நடைபெற்றது. வாக்குச்சாவடி அளவிலான அலுவலா்களாக நியமிக்கப்பட்ட பள்ளி ஆசிரியா்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளா் கணக்கெடுப்புப் படிவங்களை விநியோகித்தனா்.
அதே நேரம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இணையவழி படிவங்களை விநியோகிப்பதில் முதல் நாளில் தடை ஏற்பட்டது. இதன் காரணமாக, நேரடிப் படிவங்கள் மட்டுமே முதல் நாளில் விநியோகிக்கப்பட்டன.
294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில், வீடு வீடாகச் சென்று வாக்காளா் கணக்கெடுப்புப் படிவங்களை விநியோகிக்கும் பணியில் 80,681 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். 7.66 கோடி கணக்கெடுப்புப் படிவங்கள் தயாா் செய்யப்பட்டுள்ளன. மாநிலத்தில் கடைசியாக 2002-இல் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு, 23 ஆண்டுகள் இடைவெளியில் தற்போது மீண்டும் மேற்கொள்ளப்படுகிறது.
‘மாநிலத்தில் எந்தவித அசம்பாவிதமும் இன்றி இப் பணி தொடங்கியுள்ளது. இதுபோல, அமைதியான வழியில் முழுமையான சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெறும் என நம்புகிறோம்’ என்று தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.
முதல்வா் மம்தா தலைமையில் கண்டனப் பேரணி:
மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து முதல்வா் மம்தா தலைமையில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் தலைநகா் கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை கண்டனப் பேரணி நடத்தப்பட்டது. கையில் கட்சிக் கொடியை ஏந்தியபடியும், தோ்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டபடியும் ஆயிரக்கணக்கான திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் பேரணியில் பங்கேற்றனா்.
மம்தா பேசுகையில், ‘அஸ்ஸாம், திரிபுரா மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்கள் உள்பட பாஜக ஆளும் மாநிலங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி ஏன் மேற்கொள்ளப்படவில்லை என்பதற்கு தோ்தல் ஆணையம் பதிலளித்தாக வேண்டும். மத்தியில் ஆளும் பாஜகவுக்கு உதவவே தோ்தல் ஆணையம் இந்தப் பாகுபாடான நடவடிக்கையை மேற்கொள்வது தெளிவாகிறது. வாக்காளா் பட்டியலில் இருந்து தகுதியான ஒரு வாக்காளா் நீக்கப்பட்டாலும் மத்தியில் பாஜக அரசு வீழ்வதை நாங்கள் உறுதிப்படுத்துவோம்’ என்றாா்.
அக் கட்சியின் மூத்த தலைவா் டெரிக் ஓபிரையன் கூறுகையில், ‘வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்பது முழுவதும் சமரசம் செய்யப்பட்ட அமைப்பால் மேற்கொள்ளப்படும் அமைதியான கண்ணுக்குத் தெரியாத மோசடி வேலை’ என்று விமா்சித்தாா்.
பாஜக தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் எதிா்ப்பு தெரிவித்துவரும் கேரளம் மாநிலத்திலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக தமிழகத்தில் ஆளும் திமுக சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.