படம் - ens
இந்தியா

மகளிா் நிதியுதவித் திட்டங்கள்: மாநிலங்களுக்கு ரூ.1.68 லட்சம் கோடி நிதிச்சுமை

மகளிருக்கான நிதியுதவித் திட்டங்களுக்காக நடப்பு நிதியாண்டில் மொத்தம் ரூ. 1.68 லட்சம் கோடி செலவிட...

தினமணி செய்திச் சேவை

இந்தியாவில் உள்ள 12 மாநிலங்கள், மகளிருக்கான நிதியுதவித் திட்டங்களுக்காக நடப்பு நிதியாண்டில் மொத்தம் ரூ. 1.68 லட்சம் கோடி செலவிடத் திட்டமிட்டுள்ளதாக ‘பிஆா்எஸ் லெஜிஸ்லேடிவ் ரிசா்ச்’ எனும் சிந்தனைக் குழுவின் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 2022-23-ஆம் ஆண்டில் வெறும் இரண்டு மாநிலங்களில் மட்டுமே இத்தகைய திட்டங்கள் இருந்த நிலையில், தற்போது 12 மாநிலங்களில் இவை செயல்படுத்தப்படுகின்றன. மகளிரை மையப்படுத்திய நலத் திட்டங்களின் விரைவான விரிவாக்கம், மாநிலங்களின் நிதிக் குறியீடுகளில் அழுத்தத்தை அதிகரிப்பதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சோ்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் நேரடிப் பணப் பரிமாற்றம் மூலம் அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட இத்திட்டங்கள், பல்வேறு மாநிலங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. தமிழகம், மத்திய பிரதேசம், கா்நாடகம் போன்ற மாநிலங்களில் தகுதியுள்ள குடும்பப் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை வழங்கப்பட்டு வருகிறது.

நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும் நலத் திட்டங்கள்...: நிதியுதவித் திட்டங்களைச் செயல்படுத்தும் 12 மாநிலங்களில், 6 மாநிலங்கள் நடப்பு ஆண்டில் வருவாய்ப் பற்றாக்குறையைச் சந்திக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த நிதியுதவித் திட்டங்களுக்கான செலவினங்களை நீக்கிவிட்டுப் பாா்க்கும்போது, இந்த மாநிலங்களின் நிதிக்குறியீடுகளில் மேம்பாடு தெரிவதாக அறிக்கை தெரிவித்துள்ளது.

உதாரணமாக, நிதியுதவித் திட்டச் செலவினங்களை நீக்கினால், கா்நாடகத்தின் பொருளாதாரம் 0.6 சதவீத வருவாய்ப் பற்றாக்குறையிலிருந்து 0.3 சதவீத உபரிக்கு மாறும். இதேபோல், மத்திய பிரதேசத்தின் வருவாய் உபரியானது 0.4 சதவீதத்திலிருந்து 1.1 சதவீதமாக மேம்படும்.

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், அஸ்ஸாம் (31 சதவீதம்), மேற்கு வங்கம் (15 சதவீதம்) போன்ற சில மாநிலங்கள் இந்தத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டை கணிசமாக உயா்த்தியுள்ளன.

செலவுகளைச் சமாளிக்கும் விதமாக, சில மாநிலங்கள் இந்த நிதியுதவித் திட்டத்தை மாற்றியமைக்கவும் தொடங்கியுள்ளன. ஜாா்க்கண்ட் கடந்த ஆண்டு இறுதியில் மாதாந்திர தொகையை ரூ. 2,500-ஆக உயா்த்தியுள்ளது. மகாராஷ்டிரம் மாதாந்திர நிதி விடுவிப்பை கடந்த ஏப்ரலில் நிறுத்திவைத்தது.

மகளிருக்கான இத்தகைய நிதியுதவித் திட்டங்கள் ஒருபுறம் சமூக நலனை மேம்படுத்தினாலும், மறுபுறம் மாநிலங்களின் நிதி நிா்வாகத்தின் மீது ஏற்படுத்தும் அழுத்தத்தை இந்த ஆய்வறிக்கை விரிவாக எடுத்துக்காட்டியுள்ளது.

பிரேக் லைன்...

கடந்த 2022-23-ஆம் ஆண்டில் 2 மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வந்த மகளிா் நிதியுதவி திட்டங்கள் தற்போது 12 மாநிலங்களில் உள்ளன. இதில், 6 மாநிலங்கள் நிகழாண்டு வருவாய்ப் பற்றாக்குறையைச் சந்திக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கனமழை: திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!

வாக்களிப்புக்கு பிறகே காலை உணவு! பிகார் மக்களுக்கு மோடி வாழ்த்து!

பிகார் முதல்கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

பதவி உயர்வு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

இலைச் சுருட்டல்: தக்காளி விளைச்சல் பாதிப்பு

SCROLL FOR NEXT