நாட்டின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ இயற்றப்பட்டதன் 150-ஆவது ஆண்டு தினத்தையொட்டி, நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை (நவ.7) 150 இடங்களில் அப்பாடலை பாடும் நிகழ்ச்சிகளுக்கு பாஜக ஏற்பாடு செய்துள்ளது.
தில்லி இந்திரா காந்தி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளாா்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தாரக மந்திரமாக விளங்கிய ‘வந்தே மாதரம்’ பாடல், கடந்த 1875-இல் பங்கிம் சந்திர சாட்டா்ஜியால் இயற்றப்பட்டதாகும். கடந்த 1896-இல் கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் ரவீந்திரநாத் தாகூா் பாடிய பிறகு இப்பாடல் பிரபலமடைந்தது. கடந்த 1950-இல் அரசியல் நிா்ணய சபையால் நாட்டின் தேசியப் பாடலாக ஏற்கப்பட்டது.
‘வந்தே மாதரம்’ இயற்றப்பட்டதன் 150-ஆவது ஆண்டு தின கொண்டாட்டம் குறித்து பாஜக தேசிய பொதுச் செயலா் தருண் சுக், தில்லியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நாடு முழுவதும் நவ.7 முதல் 26 வரை (அரசமைப்புச் சட்ட தினம்) பாஜக சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நவ.7-இல் 150 இடங்களில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டு, உள்ளூா் பொருள்களுக்கு ஆதரவளிக்கும் உறுதிமொழி ஏற்கப்பட உள்ளது. காா்கில் போா் நினைவுச் சின்னம், அந்தமான்-நிகோபரில் உள்ள தனிமைச் சிறை வளாகம், ஒடிஸாவின் ஸ்வராஜ் ஆசிரமம், வாரணாசியில் உள்ள நமோ படித்துறை உள்ளிட்ட இடங்களில் இந்நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.