இவ்வளவு காலம் நீங்கள் வாக்காளராகவே இருந்திருந்தாலும்கூட சிறப்புத் தீவிர திருத்தத்துக்குப் பிறகும் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறவும் வாக்களிக்கவும் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களைச் சரிபார்த்துத் திருத்தும் பொருட்டு 'சிறப்பு தீவிர திருத்தம்' (SIR- எஸ்ஐஆர்) என்ற பெயரில் தேர்தல் ஆணையம் தனது வேலையை நவ. 4 தொடங்கியிருக்கிறது.
வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களைத் திருத்துவது, புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது, இறந்தவர்களை நீக்குவது, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருக்கும் போலி வாக்காளர்களை நீக்குவது உள்ளிட்டவை இவற்றில் அடங்கும். கடைசியாக 2002 - 2004 ஆம் ஆண்டுகளில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் பட்டியலின் அடிப்படையில் வாக்காளர்கள் வரும் தேர்தலில் வாக்களிக்க, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெற என்ன செய்ய வேண்டும்?
சிறப்புத் தீவிர திருத்தம் - படிவம்
இதில் வாக்காளர்கள் அனைவருமே தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் (க்யூஆர் கோட் உடன் கூடிய) படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இதற்காக வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வீடுவீடாகச் சென்று படிவத்தைக் கொடுப்பார்கள். அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் அந்தப் படிவத்தை நிரப்பிக் கொடுக்க வேண்டும்.
வாக்காளரின் பெயர், புகைப்படம், வாக்காளர் அடையாள அட்டை எண், முகவரி, வாக்காளர் பட்டியல் வரிசை எண், பாகம் எண், வாக்குச்சாவடி பெயர், வாக்குச்சாவடி அமைவிடம், சட்டமன்றத் தொகுதியின் பெயர், க்யூஆர் கோட் ஆகியன ஏற்கெனவே அச்சிடப்பட்டிருக்கும்.
மேலும் கணக்கீட்டுப் படிவத்தில் சம்பந்தப்பட்ட வாக்காளர்கள், தங்களது பிறந்த தேதி, ஆதார் எண் (தேவையென்றால்), கைப்பேசி எண், தந்தை, தாய், கணவர் / மனைவி பெயர், அவர்களது வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.
அடுத்ததாக முந்தைய(2002) சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் இடம்பெற்றிருந்தால் அதன் விவரங்களையும் படிவத்தில் குறிப்பிட வேண்டும். உங்களுடைய விவரங்கள் இல்லையென்றால் உங்களுடைய தாய் அல்லது தந்தையின் பெயர், முந்தைய பட்டியலில் இருந்தால் அதன் விவரங்களைக் குறிப்பிட வேண்டும்.
ஒவ்வொரு வாக்காளரும் தங்கள் பெயர், தாய், தந்தையரின் பெயர் தேர்தல் ஆணைய இணையதளத்தில் முந்தைய பட்டியலில் உள்ளதா என சரிபார்க்க முடியும். அவ்வாறு முந்தைய சிறப்பு தீவிர திருத்த பட்டியலில் பெயர் இருந்தால் எந்தக் கூடுதல் ஆவணங்களும் தேவையில்லை.
அந்த வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயரும் இல்லை, உங்களுடைய பெற்றோரின் பெயரும் இல்லை என்றால் உங்களுடைய படிவம், அடையாள ஆவணங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.
படிவத்தில் பழைய புகைப்படம் இருக்கும், மேலும் புதிய புகைப்படத்தையும்(வெள்ளை நிற பின்னணி) அதில் ஒட்ட வேண்டும்.
இரு பிரதிகள் வழங்கப்படும் நிலையில் அதனை பூர்த்தி செய்து ஒன்றை வாக்குச்சாவடி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். மற்றொரு பிரதியில் அவரிடம் ஒப்புதல் பெற்று வைத்துக்கொள்ள வேண்டும். படிவத்தை ஜெராக்ஸ் எடுத்து வழங்க முடியாது. அதனால் திருத்தங்கள் இல்லாமல் கவனமாக நிரப்ப வேண்டும். நிரப்பியவுடன் அதை ஒரு பிரதி எடுத்து வைத்துக்கொள்ளலாம் அல்லது ஆவணமாக ஸ்கேன் செய்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
படிவம் பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின், படிவத்தில் குறிப்பிட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலரின் கைப்பேசி எண்ணில் தொடர்புகொண்டு விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். படிவத்தில் வாக்குச்சாவடி அலுவலரின் பெயர் மற்றும் தொடர்பு எண் இருக்கும்.
படிவத்தை கண்டிப்பாக பெற்று நிரப்பித் தர வேண்டும். அதனைத் தவறவிட வேண்டாம்.
டிச. 4 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வழங்க வேண்டும். படிவத்துடன் முதலில் எந்த ஆவணங்களையும் வழங்கத் தேவையில்லை எனவும் உங்கள் விண்ணப்பங்களில் சந்தேகங்கள் இருந்தால் தேவைப்பட்டால் வாக்குச்சாவடி அலுவலர் உங்களிடம் ஆவணங்களைக் கேட்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆவணங்கள் என்னென்ன?
வாக்குச்சாவடி அலுவலர் ஆவணங்களைக் கேட்டால் கீழ்குறிப்பிட்டவற்றைக் கொடுக்கலாம்.
அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அடையாள அட்டைகள்.
வங்கி அல்லது அஞ்சலக அடையாள அட்டை.
பிறப்புச் சான்றிதழ்.
பாஸ்போர்ட்.
கல்வி சான்றிதழ்கள்.
நிரந்தர இருப்பிடச் சான்றிதழ்
வன உரிமைச் சான்றிதழ்
சாதிச் சான்றிதழ் உள்ளிட்டவை.
மாநில அரசு அல்லது உள்ளாட்சி அமைப்பு குடும்பப் பதிவேடு
அரசு நிலம், வீடு ஒதுக்கப்பட்ட சான்று.
ஆதார் ஒரு அடையாள அட்டையாகக் கருதப்படுமே தவிர பிறந்த தேதி, முகவரிக்கான ஆவணமாக எடுத்துக் கொள்ளப்படாது.
திருத்தம் செய்யும் பணிகள்
நவ. 4 ஆம் தேதியில் இருந்து டிச. 4 ஆம் தேதி வரை படிவங்களைச் சேகரிக்கும் பணிகள் நடைபெறும். பின்னர் வரைவு வாக்காளர் பட்டியல் டிச. 9 ஆம் தேதி வெளியிடப்படும். இதன் பின்னரே புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படுவார்கள்.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள டிச. 9 முதல் ஜன. 1 வரை அவகாசம் தரப்படுகிறது. இதில் உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை விவரங்களில் மாற்றம், இடமாற்றம், தொகுதி மாற்றம் ஆகியவற்றுக்கு படிவங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
இந்த படிவங்கள் எல்லாம் ஆய்வு செய்யப்பட்டு புதிதாக சேர்த்தல், நீக்குதல், இடமாற்றம் ஆகிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
இந்த தீவிர திருத்தப் பணிகள் நிறைவடைந்த பிறகு பிப். 7-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
இறுதிப் பட்டியல் வெளியிடுவதற்கு முன்னதாக விடுபட்டவர்கள், போலி வாக்காளர்கள் (ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களின் பெயர்கள்) உள்ளிட்டவை நீக்கப்படும்.
வாக்காளர்களின் புகார்கள் அனைத்தும் இந்த நேரத்தில் ஆய்வு செய்யப்பட்டு நிவர்த்தி செய்யப்படும்.
இவை அனைத்தும் முடிந்த பிறகு பிப். 7 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும்.
நீங்கள் படிவத்தை கொடுக்கவில்லை எனில்...
வாக்குச்சாவடி அலுவலர்கள் படிவத்தைப் பெற உங்கள் வீட்டிற்கு குறைந்தது 3 முறை வருகை தருவார்கள். அப்போது படிவத்தை நிரப்பிக் கொடுக்கவில்லை என்றால் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விடும்.
டிசம்பர் மாதம் வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால்கூட அதன் பின்னர் நீங்கள் படிவத்தைக் கொடுக்கலாம்.
அதாவது வரைவு வாக்காளர் பட்டியலில் வெளியான பின்னர் சரிபார்ப்பு காலத்திலும்(ஜன. 1 வரை) நீங்கள் உங்கள் படிவத்தைக் கொடுக்கலாம்.
அப்படியும் கொடுக்கவில்லை என்றால் இறுதி வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் இருக்காது. நீங்கள் தேர்தலில் வாக்களிக்கவும் முடியாது.
வேறு இடத்திற்கு மாறியிருந்தால்...
தற்போதைய வாக்காளர் பட்டியலில் உள்ள முகவரி விவரங்களின்படியே வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீட்டிற்கு வருவார்கள். வேறு இடங்களில் இருந்தால் படிவத்தை பெற முடியாது. வீட்டில் வேறு யாரேனும் இருந்தால் அதை பெற்றுக் கொள்ளலாம்.
ஒருவேளை வாக்குச்சாவடி அலுவலர் வரும்போது நீங்கள் வீட்டில் இல்லை என்றால் உங்கள் படிவத்தை அருகில் உள்ளவர்களிடம் விசாரித்துவிட்டு உங்கள் வீட்டின் முன் இருக்கும் பெட்டியிலோ அல்லது கதவுகளிலோ வைக்கலாம். நீங்கள் குடும்பத்தோடு இட மாற்றம் செய்திருந்தால் அந்த வீட்டில் இருப்பவர்களிடம் தகவல் தெரிவித்து படிவங்களை வாங்கி வைக்கச் சொல்லுங்கள் அல்லது நீங்களே அந்த தொகுதி அலுவலரை தொடர்புகொண்டு நேரில் சென்று படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
ஒரே தொகுதியில் வேறு இடங்களுக்கு மாறியிருந்தால் வாக்குச்சாவடி அலுவலர்களிடமே அதற்கான படிவத்தை(படிவம் 8) பூர்த்தி செய்து வழங்கலாம் என்று கூறப்படுகிறது.
வேறு இடத்திற்கு முகவரி மாறி இருந்தால் வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 8 பெற்று அந்த படிவத்தை பூர்த்தி செய்து தற்போது வசிக்கும் பகுதியில் உள்ள அலுவலரிடம் கொடுக்க வேண்டும். (இதை உங்கள் தொகுதி அலுவலரிடம் உறுதி செய்துகொள்ளவும்)
குடும்பத்தினர் அனைவரும் முற்றிலுமாக வேறு இடத்திற்கு மாறிவிட்டால் குடும்பத்தில் ஒரு உறுப்பினர்கூட நிரந்தர முகவரியில் இல்லையென்றால் சிக்கல் ஏற்படும். அவர்கள் புதியதாக பதிவு செய்ய வேண்டிய நிலை வரலாம்.
நிரந்தர முகவரியில் படிவம் கிடைத்து அதை நிரப்பிக் கொடுத்தால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் நிரந்தர முகவரியில் அவர்கள் தொடரலாம்.
வாக்குச்சாவடி அலுவலர்களும் ஒவ்வொரு பகுதிக்கும் நேரில் செல்லும்போது வாக்காளர்கள் அங்குதான் இருக்கிறார்களா? அல்லது இடம்பெயர்ந்துவிட்டார்களா என பதிவு செய்துகொள்கிறார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது?
ஆன்லைன் மூலமாக என்றால், தேர்தல் ஆணைய இணையதளமான eci.gov.in அல்லது வாக்காளர் உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
eci.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை எண், மாவட்டம், தொகுதி உள்ளிட்ட விவரங்களைத் தேர்வு செய்தால் உங்களுடைய விவரங்கள் கிடைக்கும். வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதிசெய்து கொள்ளலாம்.
இணையவழி இயலாதென்றால் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களைத் தொடர்புகொள்ளலாம் அல்லது தேர்தல் அலுவலகத்தில் தேவையான படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கலாம்.
என்னென்ன படிவங்கள்?
படிவம் 6 - புதிய வாக்காளர் சேர்க்கை
படிவம் 7 - வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க (இடம் மாறுதல் அல்லது இறப்பு).
படிவம் 8 - பெயர், வயது, முகவரி மாற்றத்திற்கு.
படிவம் 8ஏ - உங்களுடைய பெயரை வேறு சட்டமன்றத் தொகுதிக்கு மாற்றுவதற்கு.
இதனை ஆன்லைன் மூலமாகவும் ஆப்லைன் மூலமாகவும் மேற்கொள்ள முடியும்.
உங்களுடைய வாக்குச்சாவடி அலுவலர்கள் வரும்போது விவரங்கள் மாற்றப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளவும்.
மேலும் சந்தேகங்கள் விவரங்களுக்கு 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம்.
மேலும் அரசியல் கட்சி சார்ந்த வாக்குச்சாவடி அலுவலர்களையும் நீங்கள் தொடர்புகொண்டு அறியலாம்.
குறிப்பு: சிறப்புத் தீவிர திருத்தம் தொடர்பாக நிறைய சங்தேகங்களும் குழப்பங்களும் தெளிவின்மைகளும் நிலவுகின்றன. இவற்றைப் பற்றி வாசகர்கள் உறுதி செய்துகொள்வது அவசியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.