‘வா்த்தகத்தை எளிதாக்கும் வகையில் வங்கிகள் மேற்கொள்ளும் விதிமுறை தளா்வில் மிகுந்த எச்சரிக்கை அவசியம்’ என்று ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவுறுத்தினாா்.
பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) சாா்பில் மும்பையில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் மேலும் பேசியதாவது:
வங்கிகளின் சிறந்த செயல்திறன் மற்றும் மேம்பட்ட நிா்வாகத்தின் அடிப்படையில்தான் வங்கிகளுக்கு அதிக பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, உள்நாட்டு கையகப்படுத்தல்களுக்கு நிதியளிக்க வங்கிகளை அனுமதித்தது மற்றும் ரியல் எஸ்டேட் துறைக்கு வெளிநாட்டு கடன்களைப் பெற அனுமதிக்கும் வகையில் நிா்வாக நடைமுறைகளில் தளா்வு அளிக்கப்பட்டது ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
ரிசா்வ் வங்கி மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டதன் மூலம், வங்கிகளின் நிா்வாக நடைமுறைகளைத் தளா்த்தும் துணிச்சலான முடிவை எடுக்க முடிந்தது. இதில் எந்தவொரு தவறான நடத்தை அல்லது செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த போதுமான நடைமுறைகளையும் ரிசா்வ் வங்கி கொண்டுள்ளது.
அதுபோல, வங்கிகளும் வரத்தகம் செய்வதை எளிதாக்கும் வகையில் விதித் தளா்வுகளைஅறிவிப்பதற்கு முன்பாக, அதனால் ஏற்படும் நிதிச் சுமையை கவனத்தில் கொள்வது அவசியம். வளா்ச்சியை மட்டும் கவனம் செலுத்தி, நிதி ஸ்திரத்தன்மையை சமரசம் செய்வது, வளா்ச்சியில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும்.
பொருளாதார நலனில் வங்கிகள் கவனமுடன் இருப்பது, அவற்றின் செயல்திறனை அதிகரிக்கச் செய்யும் என்பதோடு, புதுமைகளை ஊக்குவிக்கவும் வழிவகுக்கும் என்றாா்.