தேர்தலைத் திருடி பிரதமரானவர் மோடி என்பதை நாட்டின் ஜென் ஸி மற்றும் இளைஞர்களுக்கு தெளிவாக எடுத்துரைப்போம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தில்லியில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, ‘எச் ஃபைல்ஸ்’ என்ற பெயரில் ஹரியாணாவில் நடைபெற்ற வாக்குத் திருட்டு தொடர்பான ஆதாரங்களை வெளியிட்டுப் பேசினார்.
ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் 25 லட்சத்துக்கும் அதிகமான போலி வாக்காளர்கள் மூலம் பாஜக வெற்றி பெற்றதாகவும் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில், தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி பேசியதாவது:
தேர்தல் திருட்டு தொடர்பாக எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன. தொடர்ந்து மக்கள் மத்தியில் இதனை அம்பலப்படுத்துவோம். இந்தியாவின் ஜென் ஸி மற்றும் இளைஞர்களுக்கு, தேர்தலைத் திருடி மோடி பிரதமரானார் என்பதையும் பாஜக தேர்தல் திருட்டில் ஈடுபடுகிறது என்பதையும் தெளிவாக எடுத்துரைப்போம்.
ஹரியாணாவில் நடைபெற்றது தேர்தலே கிடையாது, ஒட்டுமொத்தமாக திருடப்பட்டுள்ளது. போலி வாக்கு, போலி புகைப்படம் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையத்திடம் எந்த பதிலும் இல்லை. குற்றச்சாட்டுகளில் இருந்து பாஜக பாதுகாத்துக் கொள்கிறதே தவிர, நான் சொன்னதை மறுக்கவில்லை. பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெண் எப்படி வாக்களித்தார்?.
உண்மை என்னவென்றால், நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து அரசியலமைப்பு மீது தாக்குதல் நடத்துகிறார்கள். அரசியலமைப்பு ’ஒருவருக்கு ஒரு வாக்கு’ எனக் கூறுகிறது. ஆனால், ஹரியாணாவில் ’ஒருவருக்கு பல வாக்குகள்’. பிகாரிலும் இதைதான் செய்யப் போகிறார்கள். இது மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் குஜராத்திலும் நடந்துள்ளது” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.