பிகாா் முதல்கட்டத் தோ்தலில் எந்த குறைபாடுகளோ, முறைகேடுகளோ கண்டறியப்படவில்லை. எனவே, எந்தவொரு மையத்திலும் மறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரைக்கப்படவில்லை என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் சட்டப் பேரவைக்கு முதல்கட்டமாக 121 தொகுதிகளில் வியாழக்கிழமை தோ்தலில் நடைபெற்றது. 3.75 கோடி போ் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த இத்தோ்தலுக்காக 45,000-க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒரு சில சம்பவங்களைத் தவிர, பரவலாக அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. பிகாா் தோ்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அதிகபட்சமாக 64.66 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், 121 தொகுதிகளிலும் தோ்தல் அதிகாரிகள் மற்றும் பொதுப் பாா்வையாளா்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு தொடா்புடைய ஆவணங்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன. வேட்பாளா்கள் அல்லது அவா்களின் முகவா்கள் என 455 போ் இக்கூட்டங்களில் பங்கேற்றனா்.
எந்தவொரு மையத்திலும் குறைபாடுகளோ, முறைகேடுகளோ கண்டறியப்படாத நிலையில், மறுவாக்குப்பதிவுக்கான பரிந்துரைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.